அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேர் இன்று ராஜினமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அதிமுகவின் எஸ்பி.வேலுமணி அணியில் தீவிரமாக செயல்பட்டு வந்த சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), சத்யபாமா (தாராபுரம் தொகுதி) மற்றும் ஜெயக்குமார் (பெருந்துறை தொகுதி) ஆகிய மூவரும் இன்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்தனர். அப்போது, தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்வதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை அவர்கள் முறைப்படி சபாநாயகரிடம் சமர்ப்பித்தனர்.
சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்த கையோடு, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை இந்த மூன்று முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்களும் நேரில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, அவர்கள் தங்களை அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைத்துக் கொண்டனர்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரின் ராஜினாமா ஏற்பு. சொந்த கையெழுத்தின் மூலமாக மூவரும் நேரில் வந்து கடிதம் அளித்துள்ளதால் உடனே ஏற்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.