

உலக மக்கள் அனைவருக்கும் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் வேளாண் தொழில் வளர்ச்சிக்கு உதவி வரும் கதிரவனுக்கும் விவசாயிகளின் உழைப்புக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கும் உலக மக்களுக்கு உழைப்பால் உணவளித்து பசிப் பிணி போக்குவதையே வாழ்வு எனக் கொண்டுள்ள விவசாயிகளுக்கும் நன்றி கூறி குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களால் பன்னெடுங்காலமாகக் கொண்டாடப்படும் பாரம்பரியமான உன்னத விழா பொங்கல் திருநாள்.
இந்த ஆண்டு பொங்கல் திருநாள் ஜனவரி 15-ம் தேதி (வியாழக்கிழமை) தமிழ் மக்கள் வாழும் இடங்களில் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாட 2 கோடியே 22 லட்சத்து 91,710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியற்றுடன் ரூ.3,000 ரொக்கத்துடன் சேர்த்து வழங்கும் பணியை சென்னை ஆலந்தூரில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என அறிவிக்கப்பட்டது.மற்ற மாவட்டங்களில் ரொக்கப் பணம் ரூ.3,000, பொங்கல் பொருள்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு அமைச்சர்கள் வழங்கி பணியை தொடங்கி வைப்பார்கள். பொங்கல் தொகுப்புடன் விலையில்லா வேட்டி, சேலைகளும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படும்.
இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை சென்னை ஆலந்தூர், நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். இன்றைய தினமே அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.3 ஆயிரம் ரொக்கத் தொகையை பயனாளிகள் முன்பு எண்ணி வெளிப்படையாக வழங்க வேண்டும் என்றும், பொங்கல் பண்டிகை வரை ரேஷன் கடை ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மலைவாழ் பகுதி மக்கள் அதிகாலையிலேயே வேலைக்கு கிளம்புவதால், மலைவாழ் மக்கள் வசிக்கும் இடங்களில் உள்ள ரேஷன் கடைகள் காலை 6 மணிக்கே திறக்கப்படும் என்றும், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.