மோடியை புத்திசாலி என்றும், நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் புகழ்ந்திருக்கிறார் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்.
இந்தியா அதிக வரி விதிப்பதாக சமீபக்காலமாக பல விமர்சனங்கள் எழுந்தன. ஏன்! ட்ரம்ப் கூட அதிருப்தி தெரிவித்தார். இப்படியான நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பை அறிவித்திருக்கிறார். இதன்மூலம் அமெரிக்காவிற்கு மற்ற நாடுகள் எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதே அளவு வரியை அமெரிக்காவும் அந்த நாடுகளுக்கு விதிக்கும். இதுதான் பரஸ்பர வரி விதிப்பாகும்.
இதனால், சில பல பிரச்சனைகளும் இருக்கிறது. வர்த்தக போர் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வர்த்தக போரினால் பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பொருட்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு என பல பிரச்சினைகள் எழலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதுகுறித்து ட்ரம்ப் பேசுகையில், “பிரதமர் மோடி சமீபத்தில்தான் இங்கு வந்தார். என்னுடைய நெருங்கிய நண்பர். உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அது மோசமானது. அவர் (மோடி) மிகவும் புத்திசாலி மனிதர், உண்மையில் என்னுடைய சிறந்த நண்பர், நாங்கள் மிகவும் நல்ல பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
நாங்கள் விரைவில் பரஸ்பர வரிகளை விதிப்போம். அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம். அது இந்தியா, சீனா போன்ற ஒரு நாடாக இருந்தாலும் சரி அல்லது ஒரு நிறுவனமாக இருந்தாலும் சரி, நாங்கள் நியாயமாக இருக்க விரும்புகிறோம், எனவே, பரஸ்பர விதிகள் விதிக்கப்படும்” என தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்னர்தான் அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். பதவியேற்றவுடனே பல அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார். சட்டவிரோதமாக அமெரிக்காவில் வாழும் மக்களை நாடு கடத்தினார். போர் புரியும் நாடுகளிடம் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தினார். இதுபோல் பல விஷயங்களை செய்து வருகிறார். அதன்படி தற்போது அதிபர் ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.