பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாள் அரசியல் பயணமாக புருனே சென்றிருக்கிறார். இங்கு அவர் உலகின் மிகப்பெரிய அரண்மனையில் தங்கவிருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள புருனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இந்திய பிரதமர் மோடி மூன்று நாட்கள் அரசு முறை பயணம் சென்றிருக்கிறார். அந்தவகையில் தற்போது அவர் புருனே நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு கிடைத்தது. புருனே ஆங்கிலேயர்களிடமிருந்து 1984ம் ஆண்டு விடுதலை பெற்றது.
அதுமுதல் புருனேவுக்கும் இந்தியாவுக்கும் நல்ல உறவு நீடித்து வருகிறது என்றாலும், இந்திய பிரதமர்கள் அங்கு சென்றதில்லை. முதல்முறையாக தற்போது மோடி சென்றிருக்கிறார். இருநாடுகளுக்கிடையே பொருளாதார வளர்ச்சி போன்ற அனைத்து வளர்ச்சிகளை பற்றியும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் பிரதமர் மோடி உலகின் மிகப்பெரிய அரண்மனையான இஸ்தானா நூருல் இமான் அரண்மனையில் தங்குகிறார். பிரதமர் மோடி புருனேயின் சுல்தான் ஹசனல் போல்கியாவை அவரது இல்லமான இஸ்தானா நூருல் இமான் அரண்மனையில் சந்திக்கிறார். இந்த அரண்மனை கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றிருக்கிறது. புருனேயின் இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் மலாய் மரபுகளின் கலவையாக இந்த அரண்மனையின் கட்டிடக்கலை இருக்கிறது.
இது 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டது. இந்த இஸ்தானா நூருல் இமான் அரண்மனையில் 1,788 அறைகள், 257 குளியலறைகள் மற்றும் 38 வகையான பளிங்குகளால் செய்யப்பட்ட 44 படிகட்டுகளைக் கொண்டுள்ளது.
இந்த அரண்மனையின் பெயருக்கான அர்த்தம் நம்பிக்கையின் ஒளி. இது 1981இல் சுல்தான் ஹசனல் போல்கியாவால் கட்டப்பட்டது. மூன்று ஆண்டுகளில் சுமார் $1.4 பில்லியன் செலவில் கட்டப்பட்ட இந்த அரண்மனை 1984இல் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து புருனே சுதந்திரம் பெறுவதற்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டது. இதனை பிலிபைன்ஸ் கட்டிடக்கலைஞர் லியானார்டோ லோக்சின் கட்டினார்.
ஒரே நேரத்தில் 5,000 விருந்தினர்கள் சாப்பிடும் அளவுக்கு மிகப் பெரிய அறையும் இதில் இருக்கிறது. அரண்மனை உள்ளேயே 110 கார்கள் நிறுத்த முடியும். 200 குதிரைகளுக்கு ஏசி வசதியுடன் கூடிய தொழுவம், ஐந்து நீச்சல் குளங்கள், 1,500 பேர் பிரார்த்தனை செய்யக்கூடிய மசூதி ஆகியவையும் இதில் உள்ளன. இங்குள்ள படிக்கட்டுகள் 38 விதமான பளிங்குக் கற்களால் உருவாக்கப்பட்டது.
இந்த அரண்மனையில் பல தங்கம் மற்றும் வெள்ளி குவிமாடங்கள் உள்ளன.
அப்படிப்பட்ட பிரம்மாண்ட அரண்மனையில்தான் மோடி தங்கி, அந்தநாட்டு சுல்தானிடம் இரு நாடுகளின் உறவு பற்றியும் விவாதிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.