

கொசு ஒழிப்பு தொடர்பாக 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் தண்ணீர் தேக்கம் மற்றும் கொசு உற்பத்தியாகும் இடங்கள் குறித்து பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்த 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தக் கோரி கோட்டூர்புரத்தைச் சேர்ந்த விஜயராஜா என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் தற்போது இந்த உத்தரவு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
கொசு பெருக்கம் காரணமாக மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்கள் பரவக்கூடிய அபாயம் உள்ளது. மழைநீர் வடிகால்கள், காலியிடங்கள் மற்றும் கட்டுமானப் பகுதிகளில் தேங்கும் நீரால் தான் இந்த கொசுக்கள் அதிகமாக உற்பத்தி ஆகிறது. எனவே இப்பகுதிகளில் தேங்கியிருக்கக்கூடிய நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கொசு உற்பத்தி குறித்து ஆய்வு செய்து, தண்ணீர் தேங்கும் பகுதிகள், கொசு உற்பத்தியாகும் பகுதிகளை அடையாளம் கண்டு 4 வாரங்களுக்குள் விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டுமென்று அனைத்து நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்துகள் மற்றும் சுகாதாரத் துறைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுகாதார விதிகளை மீறக்கூடிய கட்டுமான நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் வீடுகளில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.