

உலகில் தாய்க்கு நிகரான உறவொன்று ஏதுமில்லை. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல; விலங்குகளுக்கும் பொருந்தும். ஆம், விலங்குகளும் தங்கள் குட்டிகளை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வளர்த்து ஆளாக்குகின்றன. குட்டிகளுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் முதல் ஆளாக தாய் விலங்கு தான் முன்வந்து நிற்கும். அப்படியான ஒரு நெகிழ்ச்சி சம்பவம் உத்தரகாண்டில் உள்ள கோசி ஆற்றில் நிகழ்ந்துள்ளது.
காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர்த் தேவைக்காக இடம்பெயரும் முக்கிய வலசைப் பாதைகளில் ராம்கர் வனப்பகுதி வழியாக பாயும் கோசி ஆறும் ஒன்று. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜிம் கார்பெட் தேசிய பூங்கா அருகேயுள்ள கோசி ஆற்றை யானைகள் கூட்டம் கடக்க முற்பட்டன.
பருவமழை மற்றும் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால், கோசி ஆற்றில் வழக்கத்தை விடவும் நீரோட்ட வேகம் அதிகமாக இருந்தது. யானைகள் கூட்டத்தில் உள்ள பெரிய யானைகள் கோசி ஆற்றின் நடுவில் மிக எளிதாகக் கடந்தாலும், பிறந்து ஒரு மாதமே ஆன குட்டி யானையால் நீரோட்டத்தின் அதிக வேகத்தை எதிர்கொள்ள முடியவில்லை.
இதனால் யானைகள் கூட்டத்துடன் சென்ற 1 மாத குட்டி யானை, ஆற்றைக் கடக்க சிரமப்பட்டது. நீரோட்டத்தில் நிலை தடுமாறிய குட்டி யானை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
தண்ணீரில் மூழ்கி, தத்தளித்தபடி அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானையைப் பார்த்த தாய் யானை, நீரோட்டத்தை நோக்கி வேகமாக நகர்ந்தது. தனது தும்பிக்கை மற்றும் கால்களைப் பயன்படுத்தி குட்டி யானை தண்ணீரில் மூழ்கி விடாமல் முட்டுக் கொடுத்துப் பிடித்தது.
குட்டி யானையைக் காப்பாற்றி, பத்திரமாக மீட்டு கரையில் சேர்த்தது தாய் யானை. யானைக் கூட்டத்தில் இருந்த மற்ற பெரிய யானைகளும் கோசி ஆற்றின் ஓரத்தில் நின்று, பாதுகாப்பாய் அரண் அமைத்து குட்டி யானை பாதுகாப்பாக கரை ஏற உதவி செய்தன.
தாய் யானையின் உதவியுடன் எவ்வித காயமும் இன்றி வனப் பகுதிக்குள் ஏறிய குட்டி யானை, காயங்கள் இன்றி ஆரோக்கியமாக இருப்பதை பதிவான வீடியோ மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
விலங்குகளின் தாய்ப் பாசத்தையும், யானைகளின் ஒருங்கிணைந்த சமூகக் கட்டமைப்பையும் பறைசாற்றும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலருடைய பாராட்டையும் பெற்று வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாய்கின்ற கோசி ஆறு, குமாவோன் பிராந்தியத்தின் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்று. பீகார் மாநிலத்தில் பாயும் பெரிய கோசி ஆற்றில் இருந்து, இது முற்றிலுமாக வேறுபட்டது. குமாவோன் பள்ளத்தாக்கு பகுதிகளில் விவசாயம் மற்றும் உள்ளூர் மக்களின் குடிநீர்த் தேவைக்கு கோசி ஆறு மிக இன்றியமையாததாக இருக்கிறது.
கோசி ஆற்றின் கரையில் பெரிய பாறையின் மீது புகழ் பெற்ற கார்ஜியா தேவி கோயில் அமைந்துள்ளது. இவ்வழியே யானைகள் அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். அப்படி யானைகள் கூட்டம் கடந்து செல்லும் போது தான் இந்த நெகிழ்ச்சியான சம்பவமும் நிகழ்ந்துள்ளது.