

காட்டுப் பகுதிகளில் இருந்து யானைகள் அவ்வப்போது சாலைகள் வழியே மனிதர்கள் வசிப்பிடத்திற்கு வருவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளாவிற்கு செல்லும் வழியில் காட்டு யானையின் அட்டகாசத்தால் புல்லட் பைக்கை நடுரோட்டிலேயே போட்டு விட்டு, நூலிழையில் உயிர் தப்பித்துள்ளனர் கணவன் மனைவி இருவர்.
காட்டு யானையைக் கண்டதும் செய்வதறியாது திகைத்த தம்பதியினர், புல்லட் பைக்கை விட்டு ஓரமாக சென்று வேடிக்கை பார்த்தனர். அப்போது சாலையில் கிடந்த புல்லட் பைக்கை காட்டு யானை ஆக்ரோஷமாக காலால் மிதித்து சேதப்படுத்தியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கூடலூரில் இருந்து கேரள மாநிலம் செல்லக் கூடிய நாடுகாணி வழிகெடுப்பு சாலையில் பகல் பொழுதில் யானைகள் அடிக்கடி வலம் வருகின்றன. இந்நிலையில் இன்று மதியம் ஒரு காட்டு யானை தனியாக சாலையில் வலம் வந்த போது, புல்லட் பைக்கில் ஒரு தம்பதி வந்தனர்.
அப்போது திடீரென வந்த யானையைக் கண்டு, என்ன செய்வதென்றே தெரியாமல், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பைக்கை சாலையிலேயே போட்டு விட்டு ஓடினர். சிறிது தொலைவில் ஓரமாக சென்று தஞ்சமடைந்த தம்பதியினர், காட்டு யானை தங்களது புல்லட் பைக்கை காலால் மிதிப்பதைக் கண்டு அதிர்ச்சியாகினர்.
பைக்கை மிதித்து விட்டு யானையும் சாலையின் ஓரத்தில் சென்று நின்றது. அவ்வழியே ஒரு குட்டி யானை வண்டியை ஓட்டி வந்த ஓட்டுநர், யானையின் இந்த செயலைக் கண்டு அமைதியாக பைக்கிற்கு பின்னால் வண்டியை நிறுத்தி விட்டார். யானை சென்ற பிறகு மெதுவாக அந்த ஓட்டுநரும் சென்று விட்டார். அதற்குப் பின்னால் ஒரு லாரியும் சென்றது.
இதையெல்லாம் தூர்த்தில் இருந்து வேடிக்கை பார்த்த தம்பதி எப்படி வீட்டுக்கு செல்வது எனத் தெரியாமல் முழித்தனர்.
காட்டு யானையிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பித்ததை நினைத்து நிம்மதி அடைவதா அல்லது பைக் சேதமாகி விட்டதே என கவலையடைவதா எனத் தெரியாமல் தம்பதியினர் திகைத்து நின்றனர்.
மலை மற்றும் காட்டுப் பகுதிகளில் யானைகள் பகல் வேளைகளில் சாலையில் நடமாடி வருவதால், பொதுமக்கள் அதிக கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் என இரு மாநில வனத் துறையினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காட்டுப் பகுதிகளில் வன விலங்குகளின் அட்டகாசம் இருப்பது இயல்பானது தான் என்றாலும், இதுபோன்ற ஆபத்து காலங்களில் வனத் துறையினரை உடனடியாக தொடர்பு கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நல்ல வேளையாக இந்த சம்பவத்தில் காயமோ, உயிர்சேதமோ இல்லை. இருப்பினும் இனி இதுபோல் நடக்காமல் இருக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.