

மத்தியபிரதேச மெட்ரோ ரெயில் சேவையில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் ரெயில்களில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்புகளுக்கு மெட்ரோ நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
திருமணம் நிச்சயமான உடன் தனது வருங்கால துணையோடு ஆடி பாடி திருமணத்திற்கு முந்தைய புகைப்படம் வீடியோ (பிரி வெட்டிங் சூட் Pre-wedding shoot) என எடுப்பது இப்போது டிரெண்டாகி வருகிறது. திருமணத்திற்கு பிந்தைய புகைப்படம், வீடியோ எடுப்பது பெரும்பாலும் கடற்கரை சொகுசு விடுதி, மலைப்பிரதேசம் என விதவிதமான இடங்களை தேர்வு செய்கிறார்கள். இதுபோன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் மத்தியபிரதேச மாநிலம் இந்தூர், போபாலில் மெட்ரோ நிலையத்திற்கு எதிர்பார்த்ததை விட குறைவான பயணிகளே வருகின்றனர். எனவே வருவாயை ஈட்ட மெட்ரோ நிர்வாகம் தற்போது திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்புக்ளுக்கு அனுமதி வழங்கி உள்ளது.
மெட்ரோவை பொதுமக்களுக்கு நெருக்கமாக கொண்டு வருவதற்காகவும், மக்கள் தங்கள் சிறப்பு நிகழ்வுகளை மெட்ரோவில் பாதுகாப்பான மற்றும் நவீன சூழலில் கொண்டாட அனுமதிப்பதற்கும் இது ஒரு முயற்சியாகும்.
இது மெட்ரோ சேவைகளை குடிமக்களின் அன்றாட வாழ்வின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றும்.
இந்த முயற்சியின் கீழ் மெட்ரோவில் படப்பிடிப்பு, வலைத்தொடர்கள், ஆவணப்படங்கள், விளம்பர தயாரிப்பு, பிறந்தநாள் கொண்டாட்டகள், விருந்துகள், திருமணத்திற்கு முந்தைய போட்டோ சூட்டிங், ஒளிப்பதிவு மற்றும் பிற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். இதற்கான கட்டணம், அலங்கரிக்கப்படாத நிலையான மெட்ரோ ரெயில் பெட்டிக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.5000 ரூபாயாகவும், நகரும் பெட்டிக்கு ஒரு மணி நேரத்திற்கு 7000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 50 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும். அதேசமயம், மெட்ரோ வளாகத்திற்குள் மது, புகைபிடித்தல், பட்டாசு வெடித்தல் மற்றும் மெழுகுவர்த்திகள் போன்றவற்றுக்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது
சம்பந்தப்பட்ட நபர் முன்பதிவு செய்ய ஒவ்வொரு பெட்டிக்கும் ரூ.20,000 (Refundable security deposit) பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்த வேண்டும். விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டால் நிகழ்வு முடிந்த பிறகு அந்த வைப்புத்தொகை திரும்ப அளிக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.
பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், குறிப்பிட்ட பெட்டிகளில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முன்னெடுப்பு, மெட்ரோ சேவைகளை பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்றும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.