இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் மிகவும் முக்கியமானவர் மகேந்திர சிங் தோனி. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார் தோனி. கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த தோனி, முதலீடு செய்வதிலும் வல்லவர் என்பது பலருக்கும் தெரியாது.
ஒரு வருடத்தில் 2 மாதங்கள் மட்டுமே கிரிக்கெட் விளையாடும் தோனி, மற்ற 10 மாதங்களை மிகவும் உபயோகமான முறையில் பயன்படுத்தி வருகிறார். குறிப்பாக கோழிப் பண்ணை மற்றும் விவசாயத்தில் தோனி ஈடுபடும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கமாகி விட்டது.
இந்நிலையில் தோனி சரியான நேரத்தில், சரியான முதலீடுகளை மேற்கொண்டு ரூ.1,000 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ப்ளூஸ்டார்ட் என்ற நிறுவனத்தில் தோனி செய்த முதலீடு அவருக்கு நஷ்டத்தையே ஏற்படுத்திக் கொடுத்தது. இருப்பினும் இதனை ஒரு பாடமாக எடுத்துக் கொண்ட தோனி, எதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதை அறிந்து கொண்டு, சரியான முதலீடுகளை மேற்கொண்டு தற்போது 1,000 கோடி ரூபாய் வரை வருமானத்தை ஈட்டியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ‘ஹவுஸ் ஆஃப் பிரியாணி’ என்று நிறுவனத்தில் சுமார் 32 கோடி ரூபாயை முதலீடு செய்தார் தோனி. நம் நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு பிரியாணி பிடிக்கும் என்பதை அறிந்து கொண்டு, பிரியாணி நிறுவனத்தில் தோனி முதலீடு செய்தது, அவருக்கு பெரும் லாபத்தை ஈடடிக் கொடுத்தது. தற்போது ஹவுஸ் ஆஃப் பிரியாணி நிறுவனம் இந்தியா மட்டுமின்றி இங்கிலாந்து, துபாய் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் தனது கிளைகளைத் திறந்துள்ளது.
ஏற்கனவே பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யும் CARS24, எலக்ட்ரிக் சைக்கிளைத் தயாரிக்கும் EMotorad, கதாபுக் (Khatabook), உணவு, பானங்களை விற்பனை செய்யும் 7InkBrews, ஃபிட்னஸ் நிறுவனமான Tagda Raha உள்ளிட்ட நிறுவனங்களிலும் தோனி முதலீடு செய்துள்ளார்.
ட்ரோன் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் Garuda Aerospace என்ற நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக தோனி இருந்தார். பிறகு இந்நிறுவனத்தில் ரூ.5 கோடியை முதலீடு செய்தார். தோனி முதலீடு செய்த பின்னர், இந்நிறுவனத்தில் அதிக ஆர்வத்துடன் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட இந்நிறுவனம் ரூ.100 கோடி முதலீட்டை ஈர்த்தது.
இந்தியாவில் நடைபெறும் ISL கால்பந்து தொடரில் ‘சென்னையின் எஃப்.சி.’ அணியின் இணை உரிமையாளராகவும் தோனி இருக்கிறார். மேலும் ‘மஹி ரேசிங் டீம் இந்தியா’ என்ற மோட்டார் சைக்கிள் பந்தய அணியின் உரிமையாளரும் தோனி தான். இதுதவிர SEVEN என்ற லைஃப் ஸ்டைல் பிராண்டையும் சொந்தமாக நடத்தி வருகிறார்.
தோனி முதலீடு செய்த அனைத்தும் அவருக்கு லாபத்தைக் கொடுக்கவில்லை. இருப்பினும் பெரும்பாலான முதலீடுகள் லாபத்தையே கொடுத்துள்ளன. சரியான நேரத்தில் செய்யப்படும் முதலீடு எவ்வளவு முக்கியம் என்பதற்கு தோனியை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்