
கடந்த 2006 ஆம் ஆண்டு மும்பை புறநகர் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் 12 பேருக்கு தூக்கு தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது 12 பேரையும் விடுதலை செய்து மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. மும்பை நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2006 ஜூலை 11 ஆம் தேதி மும்பையில் புறநகர் இரயிலில் ஆர்டிஎஅகஸ் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய இந்த குண்டு வெடிப்பில் 188 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு 829 பேர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த பயங்கரமான குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான லஷ்கர்-இ-குவாகர் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தை விசாரித்த காவல் துறை 13 பேரை கைது செய்து, மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தினர். 2015 இல் தீர்ப்பு வழங்கப்பட்ட இந்த வழக்கில் ஒருவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டார். மற்ற 12 பேரில் 5 பேருக்கு தூக்கு தண்டனை மற்றும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையை விதித்தது சிறப்பு நீதிமன்றம். சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் 12 பேரும் மேல்்முறையீடு செய்தனர்.
விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் இதில் கமல் அன்சாரி என்ற குற்றவாளி கடந்த 2021 இல் கொரோனா தொற்றால் சிறையில் உயிரிழந்தார். இதன்படி மேல்முறையீட்டு மனுவை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஷியாம் சந்தானி மற்றும் அணில் கிலோர் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழு விசாரித்தது. விசாரணையின் முடிவில் இன்று அனைவரையும் விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தீர்ப்பு குறித்து நீதிபதிகள் கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்ட 12 பேருக்கு எதிரான சாட்சியங்கள் போதுமானதாக இல்லை. மும்பை புறநகர் இரயில் குண்டு வெடிப்பில் இந்த 12 பேர் தான் குற்றவாளிகள் என நிரூபிக்க அரசு தரப்பு தவறி விட்டது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரும் உண்மையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்கள் தானா என்பதை இந்த நீதிமன்றம் நம்ப மறுக்கிறது. இதனால் 5 பேரின் தூக்கு தண்டனை மற்றும் 7 பேரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்து, அவர்களை விடுதலை செய்யுமாறு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது”.
மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்புபடி உயிரிழந்தவர் தவிர்த்து மற்ற 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து 19 ஆண்டுகள் கழித்து குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மும்பை உயர்நீதிமன்றமத்தின் தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.