
இந்தியாவின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். 1996 இல் 13 நாட்களும், 1998-99 காலகட்டத்தில் 13 மாதங்களும், 1994 முதல் 2004 வரையிலான 5 ஆண்டுகளும் வாஜ்பாய் இந்தியப் பிரதமராக பதவி வகித்துள்ளார். இவருடைய 101வது பிறந்தநாள் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை விமரிசையாக கொண்டாட மத்திய அரசும், உத்தரப்பிரதேச மாநில அரசும் முடிவு செய்துள்ளது. இதற்காக வாஜ்பாயின் பூர்வீக கிராமமான படேஷ்வரை சுற்றுலாத் தலாமாக மாற்ற உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.27 கோடி நிதியையும் ஒதுக்கியுள்ளது.
வாஜ்பாய் அவர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த பூர்வீக கிராமம் ஆக்ராவில் உள்ள படேஷ்வர். இந்த கிராமத்தில் 101 சிவன் கோயில்கள் இருப்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் முக்கிய ஆன்மீகத் தலமாக இருந்தும் இதுவரை படேஷ்வர் கிராமம் பெரிய அளவில் பிரபலமடையவில்லை.
இந்நிலையில் வாஜ்பாயின் 101வது பிறந்தநாளில் 101 சிவன் கோயில்கள் இருக்கும் படேஷ்வர் கிராமத்தை ஆன்மீக மற்றும் பாரம்பரிய சுற்றுலா தலமாக மாற்ற உத்தரப்பிரதேச அரசு முயற்சிகளை மேற்கெண்டு வருகிறது. இதற்கு மத்திய அரசும் தனது முழு ஒத்துழைப்பை அளிப்பதாக தெரிவித்துள்ளது.
ஆக்ராவின் பிரோசாபாத் சாலையில் அமைந்திருக்கும் படேஷ்வர் கிராமத்திற்கு பிரம்மாண்டமான நுழைவு வாயிலை ஏற்படுத்த உத்தரப்பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. இதுதவிர சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்த உள்ளனர். இதற்காக ரூ.27 கோடியை ஒதுக்கீடு செய்து உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. கிராமத்தின் உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகளை மேம்படுத்த தனியாக நதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆன்மீக மற்றும் யாத்ரீக அனுபவத்தை வழங்க முடியும் என்று சுற்றுலா துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.
மத்தியப்பிரதேச மாநிலத்தின் எல்லையாக இருக்கும் சம்பல் பள்ளத்தாக்கிற்கு அருகில் தான் படேஷ்வர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருக்கும் படேஷ்வர்நாத் சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் பிரதிஹாரா வம்சம் ஆட்சி புரிந்த போது, நாகரா பாணியில் கட்டப்பட்ட 101 சிவன் கோயில்களும் இந்த கிராமத்திற்கு பெருமையைச் சேர்க்கின்றன.
இக்கோயில்களில் உள்ள தல புராணத்தின் படி, மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான் முன்பொரு காலத்தில் இங்கிருந்த ஓர் ஆலமரத்தின் அடியில் ஓய்வெடுத்தார் என நம்பப்படுகிறது. மேலும் பெரிய கண்கள் மற்றும் மீசை வைத்திருக்கும் சிவன் மற்றும் பார்வதி தேவியின் சிலைகள் இங்குள்ளன. யமுனை நதியின் தலைகீழான ஓட்டம் இங்கு மற்றுமொரு அம்சமாக பார்க்கப்படுகிறது.
இத்தனை அம்சங்கள் நிறைந்திருக்கும் படேஷ்வர் கிராமம் சுற்றுலா தலமாக்கப்படுவதால், இந்திய சுற்றுலா துறையில் இதுவொரு புதிய மைல்கல்லாகவே கருதப்படும். ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை காண வரும் சுற்றுலா பயணிகள், படேஷ்வருக்கும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.