

மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக டப்பாவாலாக்களின் மதிய உணவு விநியோக சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 136 ஆண்டு கால வரலாற்றில் மிக அரிதாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் கனமழை காரணமாக கொரோனாவுக்கு பின்பு முதல்முறையாக டப்பாவாலா சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது ஒரு அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
வார இறுதி முதல் மும்பையில் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது. மும்பை முழுவதும் இடைவிடாத மழை மற்றும் பரவலான வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மோசமான வானிலை காரணமாக மும்பை பல்கலைக்கழகம் இன்று திட்டமிடப்பட்டிருந்த அனைத்து தேர்வுகளையும் ஒத்தி வைத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் நகரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது. தங்களின் அன்றாட உணவிற்காக டப்பாக்காரர்களை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான அலுவலகம் செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலர் மாற்று மதிய உணவு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மும்பையின் நாடித்துடிப்பாக இருந்து வரும் டப்பாபாலா சேவை மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் டப்பாகார்களின் உலகப் புகழ்பெற்ற விநியோக வலையமைப்பின் முதுகெலும்பாக விளங்கும் புறநகர் ரயில் சேவைகளில் ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செயல்பாடுகளை விட தங்களது பணியாளர்களின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளித்து, முற்றிலும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டப்பாக்காரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் தினமும் வீடுகளில் சமைத்த உணவை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான அலுவலக ஊழியர்கள் மாற்று வழிகளைத் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
136 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையில் சேவையாற்றி வரும் டப்பாவாலாக்கள் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் முடங்கியுள்ளதால் இன்று அவர்கள் தங்கள் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளனர். மும்பை முழுவதும் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருப்பதால் டப்பா வாலாக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; காரணம் பெரும்பாலான டப்பாவாலாக்கள் சைக்கிள்களை நம்பி இருப்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விரார்-வசாய் பகுதியில் பெய்த கனமழையால் பல டப்பாவாலாக்களின் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று டப்பா பாலா சங்கத் தலைவர் உல்ஹாஸ் முக்கே கூறியுள்ளார். பல ரயில் நிலையங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும் இதனால் பயணம் கடினமாகவும் பாதுகாப்பற்றதாகவும் உள்ளது.கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மேற்கு ரயில்வே இடையூறுகள் காரணமாக மும்பை டப்பாக்காரர்கள் இன்று (ஜூலை 6) மதிய உணவு விநியோக சேவைகளை நிறுத்தி வைத்துள்ளனர். ஊழியர்களின் பாதுகாப்பே தங்களின் முதன்மையான முன்னுரிமை என்று கூறிய அந்த சங்கம், இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியது. மீண்டும் இந்த சேவை எப்போது தொடங்கும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
உணவு கலாச்சாரத்தில் மும்பை டப்பா வாலாக்களின் பணி:
மும்பை டப்பா வாலாக்களின் பணி வெறும் உணவு விநியோகம் மட்டுமல்லாமல், அது ஒரு சமூக மற்றும் கலாச்சார பிணைப்பாகும். 1890களில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு தினமும் உணவு டப்பாக்களை வீடுகளில் இருந்து எடுத்து அலுவலகங்களில் பணிபுரியும் நபர்களுக்கு குறைவின்றி வழங்கி வருகிறது. நவீன தொழில்நுட்பங்களான ஜிபிஎஸ் அல்லது இணையம் ஏதுமின்றி பாரம்பரிய குறியீடுகளைப்(color coding) பயன்படுத்தி ரயில்கள் மற்றும் மிதிவண்டிகள் மூலம் குறித்த நேரத்துக்கு உணவை வழங்கி சாதனை படைத்து வருகின்றனர். உணவு வீணாவதைத் தடுக்க, எஞ்சிய உணவை ஏழைகளுக்கு வழங்கும் "ரோட்டி வங்கி" போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில்கள், சைக்கிள்கள், நடந்து சென்று என்று ஆயிரக்கணக்கான டப்பாவாலாக்கள் மிகவும் துல்லியமாக, ஆயிரக்கணக்கானோரின் ஒருங்கிணைப்புடன் விரைவாக நடைபெற்று வருகிறது இந்த சேவை. வீடுகளில் சமைத்த உணவுகளை டப்பாக்களில் போட்டு அதனை வீட்டிலிருந்து பெற்று பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை சுமார் 3000 டப்பா வாலாக்கள் செய்து வருகின்றனர். இவர்கள் மூலமாக தினந்தோறும் கிட்டத்தட்ட 50,000 உணவுகள் உரியவர்களுக்கு கிடைத்து வருகிறது.
இதுவரை ஒரு தவறு கூட நடைபெறாத இந்த மும்பை டப்பா வாலாக்களின் சேவைக்கு உலக அளவில் பெரிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வேலை நாட்களிலும் ஆயிரக்கணக்கான வீட்டு உணவுகளை நகரம் முழுவதும் மிகத் துல்லியமாகக் கொண்டு சேர்க்கும் திறமையான இவர்களின் விநியோகச் சங்கிலி அமைப்பு மிகவும் பாராட்டப்படக்கூடிய வகையில் உள்ளது.