

மும்பையில் சமீபத்தில், பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்ற இடங்களில் சுற்றிக் கொண்டிருக்கும் தெரு நாய்களை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை சாகிநாகாவிலிருக்கும் ஒரு பிரபல தனியார் பள்ளி வளாகத்தின் உள்ளே யேவா, பாண்டு என்ற இரு தெருநாய்கள் சுதந்திரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. அந்த பள்ளியின் முதல்வர், "உச்சநீதிமன்ற உத்தரவை எங்கள் பள்ளி பின்பற்றப் போவதில்லை என்றும், யேவா-பாண்டு எங்கள் பள்ளிக் குடும்பத்தின் ஒரு பகுதி" என்றும் கூறிய அவர் இதுகுறித்து உச்சநீதிமன்றத்திற்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.
காரணம்....? யேவா மற்றும் பாண்டு ஆகிய இரண்டு தெரு நாய்கள் சுமார் 15 வருடங்களாக அந்த பள்ளியின் வளாகத்தில் வசித்து வருகின்றன. இந்த நாய்களை பள்ளி ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி முதல்வர் சலோனி குடால்கர் ஆகியோர் பராமரிக்கின்றனர். சலோனி குடால்கர் விலங்குகளை நேசிப்பவர் என்பதும், அந்த இரு நாய்களையும் தத்தெடுத்துள்ளதுடன், அவைகளுக்கான உணவு, மருத்துவ சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளை தனது சொந்த சம்பளத்திலிருந்து நிதியளிக்கிறார். பள்ளி சமூகமும் அவற்றின் பராமரிப்பில் பங்களிக்கிறது. இரு நாய்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு, கருத்தடை செய்யப்பட்டு, வழக்கமான கால்நடை பராமரிப்பு அளிக்கப்படுகிறது.
பள்ளி வளாகத்தில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், நாய்களின் பாதுகாப்பு மற்றும் பள்ளி குடும்பத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகக் காரணம் காட்டி, நாய்களை அகற்ற மறுப்பதாக பள்ளி பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இரு தெரு நாய்களுக்கும், அந்த பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பாண்டு மற்றும் யேவா என்று பெயரிட்டுள்ளனர்.
அந்நியர்கள் யாராவது உள்ளே நுழைய முயன்றால் யேவா, பாண்டு இருவரும் குரைத்து எச்சரிக்கை செய்கின்றன.
பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணாக்கர்கள் என அனைவருக்கும் தோழர்களாக, யேவா மற்றும் பாண்டு வலம் வருகின்றன. இந்த நாய்களால் எங்களுக்கு தொந்தரவே கிடையாது என்றும் அவை மிகவும் நட்பானவை, யாரையும் கடித்தது இல்லை என்றும் எல்லோரும் கூறுகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளாக கூடவே இருந்து குடும்ப அங்கத்தினர்கள் போல் பழகிய யேவா-பாண்டு ஆகிய இரு தெருநாய்களை, உச்சநீதி மன்ற உத்தரவிற்காக, "அம்போ" என விடுவது, எந்த விதத்தில் நியாயம்? என்று பள்ளி முதல்வரும், மற்றவர்களும் கேட்பது சரிதானே...