

பீகார் மாநிலம் பாட்னாவில் 1,283 ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்-மந்திரி நிதிஷ் குமார் வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் பணி நியமன ஆணையை பெறுவதற்காக, இஸ்லாமிய பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்தவாறு மேடையேறி வந்தார். அவரை பார்த்த நிதிஷ் குமார், முதலில் ஹிஜாப்பை விலக்குமாறு சைகை காட்டினார். ஆனால் பெண் மருத்துவர் முதல்-மந்திரியை கண்டுக்கொள்ளாமல் இருந்தார். தொடர்ந்து பணி ஆணையை பெற நிதிஷ் குமாரை அந்த மருத்துவர் நெருங்கினார். அப்போது அவருடைய அனுமதியின்றி நிதிஷ் குமார் அந்த பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கினார். இதனை சற்றும் எதிர்பார்க்காததால் அந்த பெண் தடுமாறினார். இதனை மேடையில் இருந்தவர்கள் நகைப்புடன் ரசித்தனர்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், நிதிஷ் குமாரின் செயலுக்கு எதிர்க்கட்சிகள், மாதர் சங்கங்கள், இஸ்லாமிய இயக்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பற்றி கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ‘ஒரு முஸ்லிம் பெண் மருத்துவரின் ஹிஜாப்பை அகற்றுவது தவறு, அதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது’ என்று கூறினார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவர் அரசு பணியில் சேர விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவரின் பெயர் நுஸ்ரத் பர்வீன். அவர் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பீகாரை விட்டு வெளியேறி, அடுத்த நாளே அவரது சொந்த ஊரான கொல்காத்தாவிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அவர், பீகார் திரும்பி அரசுப் பணியில் சேர விருப்பமில்லை என்றும் கூறப்படுகிறது. அவர் டிசம்பர் 20-ம் தேதி பணியில் சேரவிருந்தார். அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறி வருகின்றனர். நுஸ்ரத் மீண்டும் பணியில் சேர்வது குறித்த இறுதி முடிவை அவரிடமே விட்டுவிட்டனர்.
நுஸ்ரத்தின் சகோதரர், ‘அது மற்றவரின் தவறு என்பதால், அவர் ஏன் வருத்தப்பட வேண்டும் என்று சொல்லி சமாதானப்படுத்த முயற்சிக்கிறோம். ஆனால் அவள் பணியில் சேராமல் உறுதியாக இருக்கிறாள். மற்றவரின் தவறுக்காக அவள் ஏன் வேலையை விட வேண்டும்? அவள் இப்போது மன அதிர்ச்சியில் இருக்கிறாள்’ என்று கூறினார்.
இதுகுறித்து நுஸ்ரத் பர்வீன் கூறும்போது, ‘முதல்வர் வேண்டுமென்றே இதைச் செய்தார் என்று நான் கூறவில்லை, ஆனால் அங்கு நடந்த எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. அங்கு பலர் இருந்தனர். சிலர் சிரித்தனர். ஒரு பெண்ணாக இருந்ததால், அது எனக்கு அவமானமாக இருந்தது’ என்று கூறினார்.
அவரது குடும்பத்தினர் இன்னும் நுஸ்ரத் பர்வீன் முடிவை மறுபரிசீலனை செய்ய வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
முதல்வர் நிதிஷ் குமாரின் வினோதமான நடத்தைகள் அவரது உடல்நலம் குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளன. இதுமட்டுமின்றி, பிரதமர் மோடியின் கால்களைத் தொடுவதற்கு முயற்சித்தது, தேசிய கீதம் இசைக்கப்படும்போது சிரித்தது, காந்தியின் 77வது நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய பிறகு, திடீரென கைதட்டத் தொடங்கியது, ஒரு நிகழ்ச்சியில் ஐஏஎஸ் அதிகாரியின் தலையில் சிறிய பூந்தொட்டியை வைத்தது போன்ற முந்தைய விசித்திரமான நடத்தைகளும் இப்போது விவாதிக்கப்படுகின்றன.
நிதிஷ் குமாருக்கு நெருக்கமான வட்டாரங்கள், அவருக்கு டிமென்ஷியா (அல்சைமர் நோய்) அறிகுறிகள் இருந்ததாகக் கூறின, இருப்பினும் இது குறித்து அரசாங்கத்திடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.