

செப்.19 அன்று , அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசும் போது , திமுக அதிமுக உள்ளிட்ட எதிர் கட்சிகளை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசிக் கொண்டிருந்தார். அவ்வாறு செல்கையில் அவரது பேச்சு , தவெக ஆட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீதும் சென்றது.
கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் , நெடுஞ்சாலைத் துறையில் ஊழல் நடந்ததா? இல்லையா? குடும்ப நிதி , கட்சி நிதி போன்றவற்றை வாங்கினார்களா? இல்லையா? திமுக ஊழல் செய்யவில்லை என்று கம்யூனிஸ்டுகளால் கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
பட்டினம்பாக்கத்தில் புதிய சட்டமன்றம் அமைக்கலாமா? என்று ஆய்வு தான் செய்து வருகிறோம். அங்கு சட்டமன்றம் கட்டுவதற்காக எந்த ஒரு முடிவும் முதல்வர் எடுக்கவில்லை. அதில் அரசியல் செய்து மீனவர்களை ஏமாற்ற வேண்டாம். தலைமை செயலகமா? அல்லது மீனவர்களா? என்றால், முதல்வர் மீனவர்கள் பக்கம் தான் இருப்பார். இது புரியாமல் கம்யூனிஸ்ட்கள் பேசுவது வேதனையாக இருக்கிறது, என்று ஆதவ் அர்ஜூனா பேசியிருந்தார்.
ஆதவ்வின் இந்த பேச்சு கம்யூனிஸ்ட் கட்சியில் பெரிய கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பதிலடி கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் , தமிழக முதல்வரும் சரி , அமைச்சர்களும் சரி பிரச்னைகளை திசை திருப்புவதில் தான் கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஒரு பிரச்சனையை கூறினால் , அது உரிய பதிலை கூற வேண்டியது முதல்வர் மற்றும் அமைச்சர்களின் கடமை. அதை விட்டுவிட்டு பிரச்சனையை திசை திருப்புவதால் பயனில்லை.
இப்படி இருக்கையில் ஆதவ் அர்ஜுனாவுக்கு எங்கள் மேல் ஏன் திடீர் கோவம் வந்தது? என்று தெரியவில்லை. இந்த இடதுசாரி கட்சிகளின் ஆதரவில் தான் அவர்களின் ஆட்சியே நடக்கிறது. நாங்கள் ஆதரவை வாபஸ் வாங்கி விட்டால் அமைச்சரவையே இருக்காது , சட்டசபையும் இருக்காது.
இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து தான் கவர்னர் காத்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் எப்போதும் ஆதரவு வாபஸ் என்று சொல்லுவோம்னு என்று அவர் காத்திருக்கிறார். சண்முகமும் , வீரபாண்டியனும் எப்போது சொல்வார் என்று காத்திருக்கிறார். இதை எல்லாம் ஆதவ் அர்ஜூனா தெரிந்து தான் பேசுகிறாரா? என்றும் தெரியவில்லை. நான் இதையெல்லாம் இந்த கூட்டத்தில் பேச விரும்பவில்லை. காரணம் இங்கு தவெக தொண்டர்களும் இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.
மேலும் பேசிய முத்தரசன், சென்னை விமானம் தனியார் மயமாக்கப்படுவது பற்றியும் பதில் அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது. இதைக் கூட அமைச்சர் , சென்னை விமான நிலையத்தை தனியார்மயம் ஆக்கவில்லை , விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகளை மட்டுமே தனியாரிடம் தருகிறோம் என்று கூறியிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை இரண்டையுமே நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
விமான நிலையம் தனியார் வசம் சென்றால் , அங்கு பணிபுரிபவர்கள் கொத்தடிமைகள் ஆக வேண்டிய சூழல் ஏற்படும். எதற்கும் தனியார் வசம் விமான நிலையம் செல்லக் கூடாது. இவை அனைத்தும் மக்களின் பணம்..மத்திய அரசு விமான நிலையம் , ரயில் நிலையம் என தனியார்மயமாக்க முயற்சி செய்கிறார்கள், என்று கூறியுள்ளார்.