
தொண்டர் தம் பெருமையை உலகத்தில் உள்ள அனைவருக்கும் உணர்த்த சிவபெருமானும் அம்பிகையும் அருளாடல் நிகழ்த்திய புனித தலம்தான் இந்த மயிலாப்பூர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடக்கும் பங்குனி பெருவிழாவில் அறுபத்து மூவர் உற்சவத்தில் மிகவும் சிறப்புடைய ஒன்று. இது பூம்பாவையை உயிர்ப்பித்தல் நிகழ்வாகும். என்பை பூம்பாவையாக்கி அருளுதல் நிகழ்ச்சி காலை 9 மணி வாக்கில் தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மதியம் 3.30 மணிக்கு அறுபத்து மூன்று நாயன்மார்களும் முன் செல்ல வெள்ளி விமானத்தில் கபாலீஸ்வரர் எழுந்தருளி மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது காண கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அப்போது கூடியிருந்த மக்கள் அனைவரும் 'ஓம் நமசிவாய' என்றும், 'கபாலி, கபாலி' என்றும் பக்தியுடன் முழக்கமிட்டனர்.
இதைத் தொடர்ந்து விநாயகர் முன்னே சப்பரத்தில் செல்ல வெள்ளி சப்பரத்தில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர், முண்டக கண்ணியம்மன், அங்காள பரமேஸ்வரி, வீரபத்ர சுவாமிகள் வீதி உலா வந்தனர். அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் அறுபத்து மூன்று நாயன்மார்களும் வீதி உலா வந்தனர். தொடர்ந்து காவல் தெய்வமான கிராம தேவதை கோலவிழி அம்மனும் வீதி உலா வந்தார்.
மதியம் 3.30 மணிக்கு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி இரவு வரை தொடர்ந்தது. இந்த நிகழ்ச்சியை காண சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
எங்கும் மக்கள் வெள்ளம்தான். இந்த விழாவின் சிறப்பே அன்னதானம்தான். காலையிலிருந்து இரவு வரை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வெள்ளமென திரண்டனர்.
மயிலாப்பூர் மாடவீதிகளிலும் சுற்று வட்டார பகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் தான். காலையிலிருந்து இரவு வரை உணவு பொட்டலங்களும், பானகம், நீர்மோர், விசிறி, பிஸ்கட்டுகள், இனிப்புகள், சாக்லேட்டுகள் என வழங்கிய வண்ணம் இருந்தனர். அறுபத்து மூவர் விழாவை அடுத்து இரவு பார்வேட்டைக்கு சந்திரசேகர் எழுந்தருளும் நிகழ்ச்சியும், பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தேர் திருவிழாவின் பொழுதும், அறுபத்து மூவர் விழாவின் பொழுதும் ஏகப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மிக சிறப்பாக மேற்கொண்டனர். எங்கும் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் கோவிலைச் சுற்றி மாடவிதிகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். போலீசார்களின் பணி மிகவும் பாராட்டுக்குரியதாக இருந்தது.