ஆப்பிரிக்காவில் ஒரு நாட்டில் பெயர் தெரியாத மர்ம காய்ச்சல் காற்றில் பரவி வருகிறது. இதற்கு சுமார் 79 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் பல இடங்களில் வைரஸ்கள் பரவி மக்களை காவு வாங்கி வருகின்றன. சமீபத்தில்கூட ருவாண்டாவில் கண் ரத்தப் போக்கு நோய் பரவி மக்களை பாதித்தது. அந்தவகையில் தற்போது ஆப்பிரிக்காவில் காங்கோ என்ற நாட்டில் ஒரு மர்ம நோய் பரவி வருகிறது. மக்களிடையே காய்ச்சல் பரவி வரும் நிலையில், 79 பேர் பலியாகியுள்ளனர். இதில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் 5 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 10-ம் தேதி முதல் இந்த நோய் பாதிப்பினால் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய் மக்களைத் தாக்கினால் காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்னை மற்றும் ரத்த சோகை போன்ற அறிகுறிகள் ஏற்படும் என்று அந்த நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த நோயினால் பெரும்பாலும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதன் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால், அது என்ன மாதிரியான நோய் என்பது தெரிய வரவில்லை. இதனால் மக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த நோய் காற்றில் பரவுவதால் மிக விரைவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தொடுதல் மூலம் பரவினால்கூட பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி வைக்கலாம். ஆனால், காற்றில் நோய் பரவினால், பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில், காற்றுக்கு எல்லை கிடையாது. எங்கெல்லாம் செல்கிறதோ அங்கிருக்கும் மக்களுக்கெல்லாம் அது பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆகையால், இது நாட்டை விட்டு நாடு மற்றும் கண்டம் விட்டு கண்டம் எளிதாக பரவும் அபாயம் இருக்கும். அதனால் எளிதாக உலகம் முழுவதும் பரவக்கூடும். இதனால் சுகாதாரத்துறை இந்தக் காய்ச்சலின் பெயர், எதனால் பரவுகிறது, தடுக்கு முறை போன்றவற்றை ஆராய்ச்சி செய்து வருகிறது. விரைவில் இதுகுறித்தான தகவல்கள் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.