UPSC தேர்வு எழுதுபவர்களுக்கு மாதம் ரூ.7500 மானியம் பெறலாம் : விண்ணப்பிப்பது எப்படி..?

தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, நான் முதல்வன் திட்டத்தில் மாதாந்திர உதவி தொகையாக 7500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
naan mudhalvan scheme
naan mudhalvan scheme
Published on

யுபிஎஸ்சி தேர்வு (UPSC Exam) என்பது இந்திய அரசுப் பணிகளான ஐஏஎஸ் (IAS), ஐபிஎஸ் (IPS), ஐஎஃப்எஸ் (IFS) போன்ற உயரிய பதவிகளுக்கு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (Union Public Service Commission) நடத்தப்படும் மிகவும் போட்டி நிறைந்த தேர்வாகும். இது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று கட்டங்களாக இது நடைபெறுகிறது.

அந்த வகையில் யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பங்கள் பொதுவாக ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டு, மார்ச் வரை நடைபெறும், மேலும் முதல்நிலைத் தேர்வு மே மாதத்திலும், முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் மாதத்திலும் நடைபெறுகிறது. இந்த தேர்வை எழுத பட்டப்படிப்பு (Graduation) முடித்திருக்க வேண்டும். 2026-ல் ஜனவரி 14-ம்தேதி விண்ணப்பம் தொடங்கி பிப்ரவரி 3-ம்தேதி முடிகிறது; முதல்நிலைத் தேர்வு வரும் மே மாதம் 23-ம்தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் சமீபகாலமாக தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று அசத்தி வருகின்றனர். 2025-ம் ஆண்டு 979 காலியிடங்களை கொண்ட குடிமை பணியிடங்களுக்கு நாடு முழுவதும் தேர்வு நடத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 155 பேர் தேர்ச்சி பெற்று இரண்டாம் கட்டமாக நேர்காணலுக்கு தகுதி பெற்றுள்ளனர். கடந்த முறை 136 பேர் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது அதன் விகிதம் 13.97 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச புத்தகங்களை பெறும் 7 வழிகள்!
naan mudhalvan scheme

இதேபோல் அரசு பயிற்சி மையத்தில் இருந்து யுபிஎஸ்சி தேர்வு தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. 2024-ம் ஆண்டு 48 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 2025-ம் ஆண்டில் 87 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2024-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்தாண்டு அரசு பயிற்சி மையத்தில் தேர்ச்சி விகிதம் 85.25 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றியிருப்பது தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன் திட்டம்’ தான். தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாதாந்திர உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.

2023-ம் ஆண்டு முதல் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் குடிமைப்பணி தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டுத் தேர்வின் வாயிலாகத் தேர்வு செய்யப்படும் 1,000 மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.7.500 வழங்கப்பட்டு வருகிறது.

அரசு பயிற்சி மையத்தில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன், இணைய சேவை உள்ளிட்ட பல சேவைகளும் அளிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் யுபிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குத் தயாராவதற்காக ரூ.25,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படுவது கூடுதல் சிறப்பம்சமாகும்.

ஆண்டுதோறும் யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வுக்கு தயாராகும் ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு துறை, அண்ணா நூற்றாண்டு சிவில் சர்வீஸ் பயிற்சி மையம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகளும் உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

லட்சக்கணக்கான மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்விற்கு விண்ணப்பம் செய்யக்கூடிய நிலையில் அதில் ஆயிரம் மாணவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு 7500 ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த 1000 மாணவர்கள் தேர்ந்தெடுப்பதற்கான தனித் தேர்வு நடைபெறும். யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு தேர்வுக்கான ஊக்கத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://nmcep.tndge.org/apply_now என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த மாதாந்திர உதவித் தொகை திட்டத்திற்கு தேர்வு செய்யப்படும் 1000 விண்ணப்பதாரர்களில் 50 மாணவர்கள் புதியவர்களாக (முதல்முறையாக யுபிஎஸ்சி தேர்வுக்கு முயற்சிப்பவர்கள்) இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதியவர்களுக்கான வயதுத் தகுதி என்பது குறைந்தபட்சம் 21 வயதும் அதிகபட்சம் 22 வயதும் நிரம்பியிருக்க வேண்டும். மருத்துவம், ஒங்கிணைந்த பட்டப் படிப்பு, கால்நடை மருத்துவம் போன்றவற்றில் பட்டம் பெற்றவர்களுக்கு அதிகபட்ச வயதில் தளர்வு வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்:
யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள்...!
naan mudhalvan scheme

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாடு மாணவர்கள் அசத்திக்கொண்டிருக்க வருங்காலங்களில் அகில இந்திய குடிமைப்பணிகளில் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான மாணவர்கள் அங்கம் வகிப்பார்கள் என்பதை உறுதியாக கூறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com