முழு பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்யாததால் விவசாயி உயிரிழப்பு – பாமக அன்புமணி கண்டனம்!

தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடன்களை 100% முழுமையாக ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் அரை நிர்வாணப் போராட்டம், மண் சோறு சாப்பிட்டு விவசாயிகள் தீவிரம்.
பாமக அன்புமணி
பாமக அன்புமணி
Updated on

முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சலால் நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த பிரிஞ்சிமுளை கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் என்ற விவசாயி உயிரிழந்தார். தேர்தல் வாக்குதியின்படி அனைத்து விவசாயக் கடன்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட விரக்தியில் இவர் உயிரிழந்துள்ளார். தமிழக முதல்வர் விஜய், ரூபாய் 75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு 100% கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். இருப்பினும் முழுமையான கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தவாறு பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டு இயக்கம் எச்சரித்துள்ளது. நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் எனும் ஈடுபட்டு வந்தனர்.

நாகை அருகே கீழ்வேளூரில் கூட்டுறவு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் அறிவித்தவாறு விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த அத்திப்புலியூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டமும் நடந்தது. அப்போது விவசாயிகள் கைகளில் திருவோடுகளை ஏந்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டத்தின் ஒரு பகுதியாக அரை நிர்வாணத்துடன் விவசாயிகள் பங்கேற்று வாழை இலையில் மண் சோறு சாப்பிட்டும் போராட்டம் நடத்தினர்.

முழு பயிர்க்கடன் தள்ளுபடி மறுப்பால் உழவர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. எனவே பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யுங்கள் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த பிரிஞ்சிமுளை கிராமத்தை சேர்ந்த சோமசுந்தரம் என்ற விவசாயி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சோமசுந்தரத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறு, குறு விவசாயியான சோமசுந்தரம் அங்குள்ள கூட்டுறவு வங்கியில் தமது நிலத்தை அடகு வைத்து ரூ.85 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து தமது வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்த்தார். ஆனால் இருமுறை கடன் அறிவிப்பு வெளியிடப்பட்ட போதும் ரூ.75 ஆயிரம் வரையிலான கடன்கள் மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டன. சோமசுந்தரம் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை.

பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி
பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி

அதனால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். உழவர்களின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் கடந்த 4ஆம் தேதி உழவர் அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களிலும் அவர் கலந்து கொண்டார். போராட்டத்தை முடித்துக் கொண்டு நேற்று அதிகாலை 3:30 மணிக்கு வீடு திரும்பிய அவர், அடுத்த சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முழுமையான கடன் தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் காரணம்.

தவெக ஆட்சிக்கு வந்தால் சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்த்திருந்த சோமசுந்தரம் மட்டுமின்றி லட்சக்கணக்கான உழவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால் குறுவை சாகுபடி பொய்த்து உழவர்களின் மனஉளைச்சல் மேலும் அதிகரித்திருக்கிறது. அதற்கான காரணங்களுக்கு தீர்வு கண்டு அவர்களின் மன உளைச்சலைப் போக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. எனவே தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தவாறு சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மன உளைச்சலால் உயிரிழந்த விவசாயி சோமசுந்தரத்தின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
OTT ரிலீஸ் : பாண்டிராஜின் 'பரிமளா & கோ', சன்னி தியோலின் 'இக்கா' உட்பட 3 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்!
பாமக அன்புமணி
logo
Kalki Online
kalkionline.com