

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக - பாஜக இடையிலான கூட்டணிக் கணக்குகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், பாஜக குழுவினரும் பங்கேற்றனர். தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தையாகக் கருதப்படும் இந்தச் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பின்போது, சட்டமன்றத் தேர்தலில் பாஜக போட்டியிட விரும்புவதாக 56 தொகுதிகள் அடங்கிய பட்டியலை அமித்ஷா வழங்கியதாகத் தெரிகிறது. இதன் தொடர்ச்சியாகவே, இன்று தமிழக அளவில் எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரன் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ள நிலையில், தொகுதிப் பங்கீட்டை விரைவாக முடிக்க இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை இரட்டை இலக்கத்தில் குறிப்பிடத்தக்க இடங்களைப் பிடிக்க பாஜக தலைமை இலக்கு நிர்ணயித்துள்ளது. 56 தொகுதிகள் என்ற பாஜகவின் கோரிக்கையை அதிமுக ஏற்குமா அல்லது கடந்த முறையை விடச் சற்று கூடுதல் இடங்களை ஒதுக்கிப் பேச்சுவார்த்தையை நிறைவு செய்யுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரம், பொதுக்கூட்டங்கள் எனப் பணிகளை வேகப்படுத்தியுள்ளன. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன், கூட்டணி பலத்துடன் களமிறங்க இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நயினார் நாகேந்திரனின் இன்றைய சந்திப்பு அதிமுக - பாஜக கூட்டணியின் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.