
தமிழ்நாடு அரசு மக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு நலதிட்டங்களை கொண்டு வந்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வரும் நிலையில் கடந்த 2-ம்தேதி 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் என்ற புதிய திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருகிறது.
இந்த திட்டம் ஏழை, எளிய மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே ‘நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’ மூலம் இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை செய்து அதன்மூலம் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உடனடியாக உரிய சிகிச்சை அளிப்பதற்காக தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள திட்டமாகும்.
17 சிறப்பு மருத்துவத் துறைகளை உள்ளடக்கியுள்ள இந்த திட்டத்தின் மூலம் ஓராண்டு காலத்திற்குப் பொதுமக்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இந்த திட்டத்திற்ககு ரூ.1,08,173 வீதம் மாநிலம் முழுவதும் மொத்தம் 1,256 முகாம்கள் நடத்த ரூ.13.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த முகாம்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மட்டும் நடத்தப்படும் என்றும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் (ஆகஸ்ட்) முதல் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வரை முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் இலவச பரிசோதனை செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், உங்கள் பகுதியில் இருக்கும் ஊராட்சி அலுவலகம், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை தொடர்பு கொண்டாலே ‘நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’ எங்கு நடக்கிறது என்ற விவரம் தெரிந்து கொள்ளலாம்.
ஆகஸ்ட் 2-ம்தேதி தொடங்கப்பட்டு கடந்த 2 வாரங்களாக இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் மூலம் முதல் வாரத்தில் 44,418 பேரும், இரண்டாவது வாரத்தில் 48,418 பேரும் இந்த திட்டத்தின் மூலம் பலனடைந்துள்ளனர்.
வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மட்டும் நடத்தப்பட்டு வரும் இந்த முகாம் நாளை ஆகஸ்ட் 16-ம்தேதி (சனிக்கிழமை) நடைபெறாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது அன்றைய தினம் கோகுலாஷ்டமி தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை தினம் என்பதால் முகாம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அடுத்த வாரம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 23-ம்தேதி) மீண்டும் 38 மாவட்டங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’ நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முகாமை வரும் 6 மாத காலத்தில் 1,256 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தின் 388 வட்டாரங்களில் ஒவ்வொரு வட்டாரத்திலும் 3 முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் சென்னை மாநகராட்சியில் 15 முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.