
தமிழ்நாடு அரசு, மருத்துவம் சார்ந்து பல்வேறு புதிய சிறப்பு திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் மேலும் ஒரு புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டு வர உள்ளது. அதாவது வருகின்ற ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் ‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’ எனும் புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆகஸ்ட் 2-ம்தேதி காலை 10 மணிக்கு தொடங்கிவைக்க உள்ளார்.
தமிழக அரசால் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களும் நலம் காக்கும் திட்டங்களாக இருந்தாலும் கூட புதிதாக தொடங்கப்பட உள்ள இந்த திட்டம் மக்களை மிகப்பெரிய அளவில் கவறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் என்ன? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில், தேவையுள்ள மக்களின் வீடுகளுக்குச் சென்று மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படும். ஆனால் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில், அனைத்துப் பகுதிகளிலும் முகாம் நடத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். அதாவது தற்காலிக சுகாதார முகாம்கள் கிராமங்கள், நகர்ப்புற பகுதிகளில் நடத்தப்பட்டு பொதுமக்கள் அங்கு வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இந்த திட்டத்தின் நோக்கம் அனைத்து வயதினரும், குறிப்பாக சாதாரண மக்களுக்கும் நோய் இல்லாத நிலையில் முன்கூட்டியே பரிசோதனை செய்து நோய்களை கண்டறிந்து பலன் பெறுவதாகும்.
அதுமட்டுமின்றி, ஆண், பெண் என இருவருக்குமான பல்வேறு வகையான புற்றுநோய் பாதிப்புகளையும் இந்த முகாம்களிலேயே கண்டறிகின்ற பணிகளும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் நடத்தப்படவிருக்கிறது. அந்த வகையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ எனும் திட்டம் மக்களை தேடி முழு உடல் பரிசோதனை திட்டம் என்கின்ற வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் முழு உடற் பரிசோதனை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். தனியார் மருத்துவமனைக்கு சென்று முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றால் கிட்டதட்ட ரூ.15,000 வரை செலவாகும். அதுவே அரசு மருத்துவமனையில் செல்வதாக இருந்தால் ரூ.4000 வரை செலவாகும். ஆனால் தற்போது தொடங்க உள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் மூலம் முகாம்களில் மக்கள் இலவசமாகவே முழு உடல் பரிசோதனையை செய்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தின் மூலம் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் முழு உடல் சோதனைக்கு வரவழைக்க முடியும்.
ஒட்டுமொத்த மக்களுக்கும் ஆரோக்கியம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நோய் தாக்கும் முன் கண்டறிந்து தடுக்கும் நோக்கத்தில் பயனளிக்கும் வகையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கான மாற்றுத்திறன் சக்தியை கண்டறிந்து சான்றிதழ் பெறப்பட்ட பிறகு தான் அரசின் நலத்திட்டங்கள் அவர்களுக்கு சென்றடையும். ஆனால் தற்போது வரவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அங்கேயே பரிசோதனை மேற்கொண்டு, எத்தனை சதவீதம் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து அங்கேயே சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இனிமேல் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்களிலேயே ஏற்பாடு செய்யப்படும். இதன்மூலம் புதிய பயனாளர்கள் எளிதாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய முடியும்.
வரவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்களை பொறுத்தவரை தமிழ்நாட்டில் 388 ஒன்றியங்களில், அதாவது ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 3 என்கின்ற வகையில் 1,164 முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் ஓரு வருட காலத்திற்கு பொதுமக்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. மேலும் இந்த முகாம்களில் அவரவர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதற்கான கோப்புகள் அவர்களிடமே வழங்கப்படும். எதிர்காலத்தில் மேல் சிகிச்சை செய்து கொள்ள இந்த ஆவணங்கள் உதவியாக இருக்கும். இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை மட்டுமே நடைபெறும். மற்ற நாட்களில் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.