நாட்டில் போலி வாக்காளர்களை நீக்க, சிறப்பு தீவிர வாக்களார் திருத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதல்கட்டமாக பீகாரில் வாக்காளர் திருத்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் மீண்டும் இணைய விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைய இருக்கிறது.
தமிழ்நாட்டில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது சென்னை வாக்காளர்கள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் ஜனவரி 18ஆம் தேதி வரை மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கான கால அவகாசத்தை ஜனவரி 30-ம் தேதி வரை நீட்டித்தது. இந்நிலையில் நாளையுடன் இந்த கால அவகாசம் முடிவடைய இருப்பதால் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. ஒரு மாதத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த இப்பணிகள் கூடுதல் அவகாசத்துடன் கடந்த டிசம்பர் 14 தேதியுடன் முடிவடைந்தது. வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணையதளம் அல்லது erolls.tn.gov.in/asd/ என்ற இணையதளம் வாயிலாக அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.
தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள காரணங்கள் தவறானது மற்றும் ஆட்சேபனைக்குரியதாக இருந்தால், மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைய விண்ணப்பிக்கலாம். தற்போது வரை 16.02 லடசம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் வாக்காளர்கள் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதன்படி புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள் படிவம் 6 மற்றும் இடம் பெயர்ந்தவர்கள் படிவம் 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். அடுத்த மாதம் பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் திருத்தப் பணிகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். வரைவு பட்டியலின்படி தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பிஎல்ஓ அல்லது இஆர்ஓ சாவடி முகவர்கள் மற்றும் இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே கடந்த சில வாரங்களாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுக்க நடைபெற்றன.
தற்போது மீண்டும் விண்ணப்பித்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைந்தால், தமிழ்நாட்டில் மொத்தம் 5.55 கோடிக்கும் மேலான வாக்காளர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை https://electoralsearch.eci.gov.in/, voters.eci.gov.in, மற்றும் https://www.elections.tn.gov.in/SIR_2026.aspx, என்ற இணையதள முகவரியில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டு சரி பார்த்துக்கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை - 97,37,831
இறந்தவர்களின் எண்ணிக்கை - 26,32,672
இரட்டைப் பதிவு கொண்டவர்களின் எண்ணிக்கை - 3,39,278
முகவரி இல்லாதவர்களின் எண்ணிக்கை - 66,44,881
தற்போதைய வாக்காளர்களின் எண்ணிக்கை:
பெண்கள் - 2,77,06,332 | ஆண்கள் - 2,66,63,233