
பெண்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்காக மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ள சிறப்பு திட்டம் தான் ‘நமோ ட்ரோன் திதி யோஜனா’ (Namo drone didi yojana) என்ற திட்டமாகும்.
கிராமப்புறத்தில் உள்ள பெண்களும் விவசாயத்தில் முன்னேற உதவும் வகையில் ட்ரோன் பயிற்சி அளித்து, அவர்களை ட்ரோன் பைலட்டாக மாற்றி பொருளாதார ரீதியாக அவர்களை உயர்த்த உதவுகிறது மத்திய அரசு கொண்டு வந்த ‘நமோ ட்ரோன் திதி யோஜனா’ திட்டம்.
அதன்படி, விவசாயம் தொடர்பாக பணியாற்றி வரும் எந்தவொரு சுய உதவிக்குழுக்களுக்கும், அவர்களது உறுப்பினர்களை ட்ரோன் பைலட்டாக மாறுவதற்கு நமோ ட்ரோன் திதி திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
2023ம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் நோக்கமானது, நாடு முழுவதும் உள்ள 15,000 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு, விவசாயத்திற்கு உதவும் வகையான ட்ரோன் கொடுத்து இலவச பயிற்சி அளித்து, அவர்களை ட்ரோன் பைலட்டாக மாற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. இந்த திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.1261 கோடியை ஒதுக்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், ட்ரோன்களின் விலையில் 80% மத்திய நிதி உதவி மற்றும் துணைக் கட்டணங்கள் அதிகபட்சமாக ரூ.8 லட்சம் வரை ட்ரோன்களை வாங்குவதற்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ், ஒரு தொகுப்பாக ட்ரோன்கள் வழங்கப்படும். திரவ உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதற்கான தெளிப்பு அசெம்பிளியுடன் கூடிய அடிப்படை ட்ரோன், ட்ரோன் சுமந்து செல்லும் பெட்டி, நிலையான பேட்டரி செட், கேமரா, வேகமான பேட்டரி சார்ஜர், பேட்டரி சார்ஜர் ஹப், அனிமோமீட்டர், pH மீட்டர் மற்றும் அனைத்து பொருட்களுக்கும் 1 வருட ஆன்சைட் உத்தரவாதம் ஆகியவை இந்த தொகுப்பில் இருக்கும்.
இதில் பயிற்சி பெறும் பெண்களுக்கு முதல் கட்டமாக ட்ரோனைப் பயன்படுத்துவது எப்படி?, ட்ரோன்கள் மூலமாக வயல்களில் உரங்களைத் திறம்பட தெளிப்பது எப்படி மற்றும் ட்ரோன் நிறைய தண்ணீரை எப்படி சேமிக்கிறது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த ட்ரோன்கள் மூலம் 7 முதல் 8 நிமிடங்களில் ஒரு ஏக்கர் விவசாய நிலங்களில் உரங்கள் தெளிக்க, விதைகள் போட மற்றும் கண்காணிக்க பயன்படுத்த முடியும்.
‘நமோ ட்ரோன் திதி யோசனா’ திட்டத்தின் மூலமாக இந்தியாவில் சுமார் 1000 பெண்களுக்கு ட்ரோன்களை மத்திய அரசு வழங்கி உள்ளது. மேலும் ஒரு வாரம் இலவச ட்ரோன் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி மூலமாக கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, அவர்களை சொந்த காலில் நிற்க மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியால், விவசாயிகளின் இப்பணிகள் எளிமையாகவும் விரைவாகவும் செயல்படுத்தும் அதே வேளை, அதை கையாளும் வகையில் தொழில்நுட்ப நபர்களையும் உருவாக்குவதும் மிகவும் அவசியம். நமோ ட்ரோன் திதி திட்டமானது அதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி பெறுவதற்கு 10-ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். பாஸ்போர்ட் அல்லது பேன்கார்டு அல்லது அரசு அங்கீகார அடையாள அட்டை ஏதேனும் ஒன்று வைத்திருக்க வேண்டும். இலவச பயிற்சி பெற எந்தவித கட்டணமும் கிடையாது.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் ஆண்களுக்கு நிகராக பெண்களும் விவசாயத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக பார்க்கப்படுவார்கள்.