விமர்சனம்: தி ஸ்மைல் மேன் - சுப்ரீம் ஸ்டாரின் சூப்பர் படம்!
ரேட்டிங்(3.5 / 5)
ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த் போன்றவர்கள் ஹீரோவாக நடித்து கொண்டிருந்த போது வில்லனாக அறிமுகம் ஆகி தனது வித்தியாசமான ஆக்ஷன் நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து ஹீரோவாக உயர்ந்தவர் சரத் குமார். சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்கள் மத்தியில் அன்புடன் அழைக்கப்படும் சரத் குமார் 150 படங்களில் நடித்து விட்டார் இவரின் 150 வது படமான தி ஸ்மைல் மேன் படத்தை ஷாம் - பிரவின் இணைந்து இயக்கி உள்ளார்கள்.
ஒரு விபத்து நடந்த பிறகு அதிலிருந்து மீண்டு பணிக்கு வருகிறார் சி ஐ டி ஆபிசர் சிதம்பரம் (சரத்குமார்) வாயை கிழித்து சிரித்த நிலையில் வைத்து சிலரை கொலை செய்கிறான் ஸ்மைல் மேன் என்று போலீஸ்காரர்களால் அழைக்கப்படும் ஒரு சைக்கோ கொலைகாரன். சிதம்பரத்துடன் தொடர்புடைய சில நபர்கள் வாய் கிழிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். சிதம்பரத்திற்கு இந்த ஸ்மைல் மேன் கொலைகளில் தொடர்பு இருக்குமோ என சி ஐ டி சந்தேகம் கொள்கிறது. ஸ்மைல் மேன் யார்? ஏன் இந்த சைக்கோ கொலைகள்? சிதம்பரத்திற்கும் இந்த கொலைகளுக்கும் என்ன தொடர்பு? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது தி ஸ்மைல் மேன்.
இந்த ஆண்டு தமிழில் வெளியான போர் தொழில் படத்திற்கு பிறகு இரண்டாவதாக வந்துள்ள சிறந்த சைக்கோ த்ரில்லர் படம் தி ஸ்மைல் மேன். சஸ்பென்ஸ், கொஞ்சம் பயம், திரில்லர் என மூன்று அனுபவங்களை படம் முடியும் வரை தக்க வைத்த விதத்தில் இரண்டு டைரக்டர்களுக்கு சபாஷ் போடலாம். இரண்டு மணி நேரத்திற்கு சற்று அதிகமாக ரன்னிங் நேரம் கொண்ட இப்படத்தில் முதல் காட்சி ஒரு விபத்துடன் தொடங்குகிறது. இறுதி காட்சி சோகத்துடன் முடிகிறது. இடைப்பட்ட காட்சிகளை ஒன்றோடோன்று நேர்த்தியாக தொடர்பு படுத்தி த்ரிலிங் என்ற நூலில் கோர்த்துள்ளார்கள் டைரக்டர்கள்.
இந்த படத்தில் சரத்குமாரின் நடிப்பை பார்க்கும் போது சரத் குமாரை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்த வில்லையோ என்று சொல்லத் தோன்றுகிறது. ஓரு பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் நினைவுகள் இழந்து தடுமாறி, தடுமாறி நடிக்கும் போது 150 படங்களில் நடித்த அனுபவம் தெரிகிறது. வில்லனிடம் அடி வாங்கி விட்டு திருப்பி அடிக்க முடியாமல் ஒரு பார்வை பார்க்கும் இடத்தில் சபாஷ் சரத் என்று சொல்ல வைக்கிறார். கலையரசன் இது வரை நாம் பார்காத கேரக்டரில் நடித்திருக்கிறார் இவரின் கேரக்டரை பற்றி இங்கே சொன்னால் படம் பார்க்கும் போது சுவாராசியம் குறைந்து விடும். ஸோ, திரையில் பார்த்து அனுபவம் பெறுக. ஒளிப்பதிவு தரத்தில் குறைவாகவும், படத்தொகுப்பு தரத்தில் நிறைவாகவும் உள்ளது. தமிழில் இது வரை வந்துள்ள படங்களில் தி ஸ்மைல் மேனுக்கு கண்டிப்பாக ஒரு இடம் இருக்கும். இந்த சைக்கோ மேனை நீங்கள் பார்க்க போனால் உங்கள் முகத்தில் ஸ்மைல்க்கு பதிலாக பயம் தான் இருக்கும்.