

கடந்த மூன்று ஆண்டுகளாக உலகளாவிய ஊக்கமருந்து குற்றவாளிகள் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா இருந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் புதிதாக திருத்தம் செய்யப்பட்டுள்ள தேசிய ஊக்கமருந்து தடுப்பு சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பொருட்களை உபயோகம் செய்வதும், அவற்றை விளையாட்டு வீரர்களுக்கு விநியோகம் செய்வதும் குற்றமாகும் என அறிவித்துள்ளது.
ஊக்கமருந்து பயன்படுத்துபவர்கள் மற்றும் அதனை விநியோகம் செய்பவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஐந்து லட்சம் அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம், விளையாட்டு வீரர்களைத் தண்டிப்பதை விட, ஒழுங்கமைக்கப்பட்ட ஊக்கமருந்து கும்பல்களை ஒழிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தடைசெய்யப்பட்ட இந்த ஊக்கமருந்துகளைத் தெரிந்தே பரிந்துரைக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட விநியோகஸ்தர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிப்பதன் மூலம், சட்டவிரோத விநியோக வலைப்பின்னல்களை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து பொதுமக்கள் தேவையான கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் விளையாட்டு அமைச்சகத்தின் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அவற்றை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜுன் 18ம் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெறப்பட்ட கருத்துக்களை கருத்தில் கொண்டு பிறகு, திருத்தப்பட்ட மசோதா பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வரும் 2036-ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விரும்புகிறது; மேலும், 2030-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் உரிமையையும் ஏற்கனவே பெற்றுள்ளது. இருப்பினும், உலகளாவிய ஊக்கமருந்து குற்றவாளிகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பது இத்திட்டத்திற்கு பெரும் தடையாக அமையக்கூடும்.
ஊக்கமருந்துப் பயன்பாடு என்பது இனி வெறும் விளையாட்டு விதிமீறல் மட்டுமல்ல; அது விளையாட்டு வீரர்களைச் சுரண்டும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சூழலமைப்பாக உருவெடுத்துள்ளது என்றார்.
எனவே, பயிற்சியாளர், மேலாளர், சக விளையாட்டு வீரர் அல்லது ஒரு விளையாட்டு வீரருடன் நேரடித் தொடர்பு கொண்ட எவராக இருந்தாலும், இந்தத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால், விநியோகச் சங்கிலியின் ஒரு பகுதியாகக் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்றும் அவர் கூறினார்.
சான்றளிக்கப்பட்ட மருத்துவ நிலைகளுக்காக 'சிகிச்சை சார்ந்த பயன்பாட்டு விலக்கு' (Therapeutic Use Exemption - TUE) பெற்ற விளையாட்டு வீரர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கும், அவசர மருத்துவச் சூழல்களைக் கையாளும் மருத்துவர்களுக்கும், இச்சட்டம் விலக்கு அளிக்கிறது. இத்தகைய சூழல்களில், தங்கள் தரப்பில் எக்குற்றமும் இல்லை என்பதை நிரூபிக்கும் பொறுப்பு, சம்பந்தப்பட்ட விளையாட்டு வீரரையே சாரும். மேலும் உண்மையான அவசரச் சூழல்களில் விளையாட்டு வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், சட்டரீதியான பொறுப்புகளிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.
ஊக்கமருந்து அச்சுறுத்தலைச் சமாளிக்க தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் மாண்டவியா, தடைசெய்யப்பட்ட மருந்துகளை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் விநியோகிப்பதைக் குற்றமாக்குவது அவசியம் என்று கூறினார்.