
பண்டிகை காலங்களில் தள்ளுபடி விலையில் பலவிதமான ஆடைகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். பொதுமக்களை ஈர்க்கும் வண்ணம் ஜவளிக்கடைகள் தள்ளுபடி குறித்த விளம்பரங்களை செய்வதுண்டு. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் தீபாவளி பண்டிகை வரவிருப்பதால், கைத்தறி ஆடைகளுக்கு 50% சிறப்புத் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகின்ற அக்டோபர் 17 ஆம் தேதி வரை கைத்தறி ஆடைகளுக்கு 30% முதல் 50% வரை தள்ளுபடி வழங்கப்படும்.
தேசிய கைத்தறி கண்காட்சி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் கைத்தறி ஆடைகளை தள்ளுபடி விலையில் வாங்க முடியும். கைத்தறி நெசவாளர்கள் பாரம்பரிய முறையில் நெசவு செய்த ஆடைகள் இங்கு கிடைக்கும்.
இன்றைய காலகட்டத்தில் பாரம்பரிய ஆடைகளைக் காண்பதே அரிதாகி விட்டது. ஆனால் கைத்தறி ஆடைகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த மத்திய அரசு அவ்வப்போது கண்காட்சியை ஏற்பாடு செய்கிறது. அவ்வகையில் தற்போது சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் தேசிய கைத்தறி கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சி வருகின்ற அக்டோபர் 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்பதால், பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைத்தறி கண்காட்சியில் பூம்பட்டு, புதுமணப்பட்டு, பேஸ்டல் கலெக் ஷன்ஸ், கட்டம் பட்டு, பட்டு நூல் டிசைனர் சேலைகள், வெண்ணிலா கலெக் ஷன்ஸ், பருத்தி நூல் யோகா மேட், அனுதினப்பட்டு, தாய்-சேய் பெட்டகம் மற்றும் தர்ப்பை புல் யோகா மேட் ஆகிய புதிய ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியில் 300-க்கும் மேலான கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும், வெளிமாநில தலைமை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுடன் மத்திய மற்றும் மாநில சிறப்பு முகமை நிறுவனங்களும் பங்கு பெற்றுள்ளன.
திருபுவனம் பட்டு, காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், அருப்புக்கோட்டை, செட்டிநாடு, நெகமம், கோரா காட்டன், மதுரை சுங்குடி, செடிபுட்டா, கூரைநாடு, பரமக்குடி புதினம், காஞ்சி காட்டன், ஆர்கானிக் சேலைகள் மற்றும் மென்பட்டு சேலைகள் கைத்தறி கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி கரூர் பெட்சீட், சென்னிமலை பெட்சீட் மற்றும் ஏற்றுமதி ரகங்களுடன், வெளி மாநிலங்களின் பிரசித்தி பெற்ற ஆடைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கைத்தறி கண்காட்சி வருகின்ற 17 ஆம் தேதி வரை தினந்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை, 15 நாட்களுக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும். தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் விற்பனை செய்யும் கைத்தறி ரகங்களுக்கு 30% முதல் 50% வரை சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் கைத்தறி கண்காட்சி நடைபெறுகிறது. ஆகையால் இந்தக் கண்காட்சிக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம்.