
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு தற்போது சூப்பர் சலுகை ஒன்றை சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இன்றுமுதல் டிஜிட்டல் டிக்கெட்டுகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு கட்டணத்தில் குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் கட்டணம் அதிகம் என சொல்பவர்களுக்கு இந்த அறிவிப்பு நிச்சயமாக ஆறுதலாக இருக்கும்.
இந்தியாவில் பொதுமக்கள் பலரும் ரயில் போக்குவரத்தையே விரும்புகின்றனர். ஏனெனில் மற்ற போக்குவரத்துகளைக் காட்டிலும் இதில் கட்டணம் குறைவு. அதோடு சௌகரியமான பயணத்திற்கு ரயில் போக்குவரத்து தான் ஏற்றது. சென்னையைப் பொறுத்தவரை தற்போது மின்சார ரயில், மெட்ரோ ரயில் மற்றும் விரைவு ரயில் என மூன்று பிரிவுகளாக ரயில் போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. இதில் சென்னை நகர மக்களுக்கு விரைவான பயண அனுபவத்தை மெட்ரோ ரயில் தொடர்ந்து வழங்கி வருகிறது.
மின்சார ரயில் கட்டணத்தைக் காட்டிலும் மெட்ரோ ரயிலில் பயணிக்க கட்டணம் அதிகம். ஆகையால் நடுத்தர மக்கள் பலரும் மெட்ரோ ரயில் பக்கம் செல்லவே இல்லை. விரைவான பயணத்தால் பயணிகளின் நேரம் மிச்சமாவதால், மெட்ரோ ரயிலில் பயணிக்க போதுமான அளவு கூட்டம் தொடர்ந்து வருகிறது. மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை டிஜிட்டல் முறையில் ஆன்லைனில் பெறும் வசதியும் இருப்பதால், பயணிகள் டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை.
பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் மெட்ரோ நிறுவனம், இன்னும் அதிகப்படியான பயணிகளை கவரும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் கட்டண சலுகையில் புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி மெட்ரோ ரயிலில் பயணிக்க டிஜிட்டல் டிக்கெட்டுகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 20% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கட்டண சலுகை குறித்து சென்னை மெட்ரோ நிறுவனம் கூறுகையில், “கடந்த 2022 நவம்பர் மாதம் முதல் மெட்ரோ ரயிலில் பயணிக்க டிஜிட்டல் டிக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பயணிகள் தங்கள் மொபைல்போனில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் மொபைல் எண்ணை உள்ளிட்டு டிஜிட்டல் டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த வசதியை மொபைல் செயலியின் வழியாக மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டிஜிட்டல் டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் டிக்கெட் கட்டணத்தில் 20% தள்ளுபடியைப் பெறலாம்.
இதில் பயணிகள் ரீசார்ஜ் செய்த நாளிலிருந்து 5 ஆண்டுகள் வரை டிஜிட்டல் டிக்கெட்டுகள் செல்லுபடியாகும். டிஜிட்டல் டிக்கெட்டுகளை குறைந்தபட்சம் ரூ.50 முதல் அதிகபட்சம் ரூ.3,000 வரை ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். பயணிகள் பயணம் செய்ய செய்ய ரீசார்ஜ் தொகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.