ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்க தங்களை முழுமையாக அர்ப்பணித்துள்ள சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் தேசிய 'நல்லாசிரியர் விருது' வழங்கப்படுகிறது.அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 'நல்லாசிரியர் விருது' 45 ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உள்பட நாடு முழுவதும் 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதேபோல, புதுச்சேரியைச் சேர்ந்த தில்லையாடி வள்ளியம்மை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ராதாகிருஷ்ணனுக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டில்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.சென்னை, மயிலாப்பூரில் உள்ள, பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ரேவதி பரமேஸ்வரன், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள, பாரதியார் நுாற்றாண்டு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.