
இன்றைய நவீன காலகட்டத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி விட்டது. இதன் விளைவாக நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அடைந்து, அதன் தரம் குறைந்து கொண்டே போகிறது. குறிப்பாக சர்வீஸ் செய்யப்படாத பழைய வாகனங்களில் இருந்து அதிக புகை வெளியேறும் என்பதால், காற்று மாசுபாடு தீவிரமடைகிறது. இதனைத் தடுக்கும் விதமாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முதல் முன்முயற்சியாக சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் வெளியிடும் புகையை மதிப்பீடு செய்ய முன்வந்துள்ளது.
இதன்படி ஒவ்வொரு வாகனமும் எவ்வளவு புகையை வெளியிடுகிறது மற்றும் அந்தப் புகையில் கார்பன் உமிழ்வு எவ்வளவு உள்ளது என்பதை கண்காணிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
வாகனங்களின் புகையைக் கண்காணிக்கும் முன்னோடி திட்டம் தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் முதலில் தொடங்கப்பட இருக்கிறது. கோவையில் கடந்த சில ஆண்டுகளாக காற்றின் தரம் குறைந்து கொண்டே போவதால், மனிதர்களுக்கு சுவாசக் கோளாறுகள் உள்பட சில நோய்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள கணியூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் வெளியிடும் புகையைக் கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்து திருப்பூர், அவிநாசி, சேலம் மற்றும் ஈரோடு வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் கணியூர் சுங்கச்சாவடியைக் கடந்து தான் செல்ல வேண்டும். இதனால் தான் முதலில் கணியூர் சுங்கச்சாவடியைத் தேர்ந்தெடுத்துள்ளது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்.
சென்னை, கோவை, திருச்சி மற்றும் வேலூர் உள்ளிட்ட பெருநகரங்களில் வாகனங்களின் அதிகரிப்பால் ஒருபுறம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட, மறுபுறம் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து வருகிறது. ஒருசில வாகனங்கள் அதன் ஆயுட்காலத்தை தாண்டியும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் சில வாகனங்கள் சர்வீஸ் செய்யப்படாமல் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக வாகனங்களில் இருந்து வரும் கரும்புகையில் கார்பன் அளவு அதிகமாக இருக்கிறது. இது மனிதர்களை மட்டுமின்றி சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது.
இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைக்க அரசு பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் கணியூரை அடுத்து, கோவையில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையில் உள்ள கார்பன் உமிழ்வு கண்காணிக்கப்பட உள்ளது.
எந்த வாகனத்தில் கார்பன் உமிழ்வு அதிகமாக உள்ளதோ, அவ்வாகனத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டு கார்பன் அளவைக் குறைக்கத் தேவையான நடவடிக்கையை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ளும். அதோடு, கார்பன் உமிழ்வைத் தடுக்க வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இதுகுறித்து மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், “முதற்கட்டமாக கோவை கணியூர் சுங்கச்சாவடியில் கார்பன் அளவு கண்காணிக்கப்படும். பிறகு இத்திட்டம் தமிழ்நாடு முழுக்க விரிவுபடுத்தப்பட்டு அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் வெளியிடும் புகையைக் கண்காணித்து, கார்பன் அளவைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் வெகு விரைவில் கார்பன் உமிழ்வு கட்டுப்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் முன்னோடி திட்டமாக இருக்கும்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.