இந்தியாவில் உள்ள 1,02,075 பெட்ரோல் நிலையங்களில் 6,967 பெட்ரோல் நிலையங்களை நயாரா எனர்ஜி நிறுவனம் இயக்கி வருவது.
இந்நிலையில்,இந்தியாவின் மிகப் பெரிய தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனமான நயாரா எனர்ஜி, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 ரூபாயையும் குறைத்துள்ளது.
ஈரான் - அமெரிக்கப் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடக்கம் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு, கடந்த மார்ச் 26ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.30 வரையிலும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 வரையிலும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஈடுகட்ட அரசு தரப்பில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், தனியார் நிறுவனங்களுக்கு அத்தகைய இழப்பீடுகள் வழங்கப்படுவதில்லை. அதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினத்தின் ஒரு பகுதியை நுகர்வோர் மீது சுமத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக நயாரா எனர்ஜி தெரிவித்தது.
இந்நிலையில் தனியார் எரிபொருள் விநியோக நிறுவனமான 'நயாரா எனர்ஜி' (Nayara Energy), நாடு முழுவதும் உள்ள தனது 7,000-க்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹5-மும், டீசல் விலை லிட்டருக்கு ₹3-மும் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து இந்த விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வந்த போர்ச் சூழல் மற்றும் பதற்றம் தணிந்ததன் காரணமாக, உலகளவில் கச்சா எண்ணெய் விலை மிக வேகமாக சரிந்துள்ளது. மேலும், முக்கிய கடல்வழிப் போக்குவரத்து பாதைகள் மீண்டும் திறக்கப்பட்டு, கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகம் சீராகியுள்ளது. கடந்த மார்ச் 26 அன்று வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட விநியோக தட்டுப்பாட்டால் நயாரா நிறுவனம் பெட்ரோல் விலையை ₹5-மும், டீசல் விலையை ₹3-மும் உயர்த்தியிருந்தது. தற்போது உலகளாவிய தட்டுப்பாடு நீங்கியுள்ளதால், மார்ச் மாதம் உயர்த்திய விலையை நிறுவனம் அப்படியே குறைத்துள்ளது.
இந்த விலை குறைப்பின் மூலம் சென்னையில் நயாரா பங்குகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹102.76-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாநிலங்களின் உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப இந்த சில்லறை விலை மாறுபடும் என்று நயாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், நாட்டின் 90 சதவீதத்திற்கும் அதிகமான சந்தைப் பங்குகளைக் கொண்டுள்ள அரசு பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் (IOCL), பாரத் பெட்ரோலியம் (BPCL) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) ஆகியவை தங்களது எரிபொருள் விலையில் தற்போதைக்கு எந்த மாற்றமும் செய்யவில்லை. கடந்த மே மாத பிற்பாதியில் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தலா ₹7.50 வரை உயர்த்தியிருந்தன. அந்த விலை தற்போதும் நீடிப்பதால், அரசு பொதுத்துறை பங்குகளில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹107.76-க்கும், டீசல் ₹99.55-க்கும் தொடர்ந்து விற்பனையாகி வருகிறது.