சர்ச்சை பாடப்பகுதி: 2.25 லட்சம் புத்தகங்களைத் திரும்பப் பெறுகிறது என்சிஇஆர்டி..!

NCERT
NCERTimage Source:dinamalar
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

என்சிஇஆர்டி(NCERT) 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தின் 4வது அத்தியாயத்தில் "நீதித்துறையில் ஊழல்"(Corruption in Judiciary) மற்றும் நிலுவை வழக்குகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்றிருந்தன. 'Exploring Society: India and Beyond' (Part II) என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருந்த இந்த உள்ளடக்கத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து, என்சிஇஆர்டி அந்த புத்தகத்தை முழுமையாக வாபஸ் பெற்று நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின்(NCERT) புதிதாக அச்சடிக்கப்பட்ட எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பில் சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்றதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல், தேங்கி நிற்கும் வழக்குகள் மற்றும் நீதிபதிகள் பற்றாக்குறை போன்ற விவகாரங்கள் தவறான கோணத்தில் சித்தரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனைக் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அத்துடன் இந்தப் புத்தகம் விநியோகிக்கப்படக்கூடாது என்று தடை விதித்ததுடன், இளம் மாணவர்களிடையே நீதித்துறை மீதான நம்பிக்கையை இது சிதைக்கும் என்றும் நீதிமன்றம் கவலை தெரிவித்தது.

'நீதித்துறையில் ஊழல்' என்ற தலைப்பிலான பாடப்பிரிவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்ததுடன், இது நீதித்துறைக்கு எதிரான சதி என்றும், திட்டமிட்டே இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாகவும் சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து என்சிஇஆர்டி இயக்குனருக்கும், பள்ளி கல்வித்துறை செயலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் எதிர்ப்பை அடுத்து, அச்சடிக்கப்பட்ட 2.25 லட்சம் பிரதிகளில் விற்கப்பட்ட 38 பிரதிகளை திரும்பப்பெறும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், இது தற்செயலாக நிகழ்ந்த தவறு என்றும், அந்த பாடப்பகுதி திருத்தி எழுதப்படும், அதற்காக மன்னிப்பு கோருகிறோம் என்றும் என்சிஇஆர்டி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

NCERT, "Exploring Society: India and Beyond" part II புத்தகத்தை திரும்பப் பெற்று, அதில் உள்ள தவறான பகுதிகள் நீக்கப்படும் அல்லது திருத்தப்படும் என உறுதி அளித்ததுடன், இந்த விவகாரம் தொடர்பாக நிபந்தனையற்ற பொது மன்னிப்பையும் கோரியது. சர்ச்சைக்குரிய அந்த புத்தகம் சந்தையில் இருந்து முழுமையாக திரும்பப் பெறப்படும் என்றும், இனி விற்பனைக்கு கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BIG BREAKING : மக்களே உஷார்..! நாடு முழுவதும் அமலுக்கு வந்தது ESMA சட்டம்…!!
NCERT
logo
Kalki Online
kalkionline.com