
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையை தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மிசோரம் மாநிலத்தில் மட்டும் 24-ம்தேதி முதல் மொத்தமாக 600 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் மறுவாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் தற்போது கடுமையான பருவமழையை எதிர் கொண்டுள்ளன. இதைத் தொடர்ந்து கனமழையால் பரவலான சேதம், இடம்பெயர்வு மற்றும் உயிர் இழப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளது.
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 171 வீடுகள் கனமழையால் சேதமடைந்துள்ளன. நிலச்சரிவு காரணமாக 244 பேரும், வெள்ளம் காரணமாக 119 பேரும் ஆபத்தான இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 257 பகுதிகளில் சாலைகளில் தடைகள் ஏற்பட்டுள்ளன. நிலச்சரிவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சியால்சுக் சுற்றுலா கிராமத்தில், ஜூன் 1-ம் தேதிக்குள் மழையின் காரணமாக சாலைகளில் ஏற்பட்ட தடையினால், வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தவர்களின் எண்ணிக்கை 600க்கும் அதிகமாக இருந்தது. ராம்லைடுய் கிராமத்தில், நிலச்சரிவுகள் சாலையைத் தடுத்தபோது 100க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கித் தவித்தனர். உள்ளூர்வாசிகள் அவர்களை தங்கள் வீடுகளில் தங்க வைத்தனர். மற்ற பகுதிகளிலும் உள்ளூர் மக்கள் சுற்றுலாப் பயணிகளை தங்கள் வீடுகளில் தங்க வைத்து உணவு உபசரிப்பும் செய்துள்ளனர். கிராமசபை பொருட்களை ஒருங்கிணைத்து உணவுகளை வழங்க ஏற்பாடு செய்திருந்தது.
மாநில அரசு , ஜூன் 13, 2025 வரை மிசோரம்மிற்கு சுற்றுலா வர திட்ட மிட்டவர்களின் பயணங்களையும், அலுவல் விஷயமாக வர திட்டமிட்ட பயணங்களையும் ஒத்தி வைக்க அறிவுறுத்தியுள்ளது. மிசோரம் மாநில வானிலை மையம் "வரும் நாட்களில் தொடர்ந்து கனமழை முதல் மிக அதிக கனமழை வரை பெய்யும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மிசோரமின் பேரிடர் மேலாண்மை மற்றும் மறுவாழ்வு அமைச்சர் லால்நிலவ்மா, நிவாரணப் பணிகளைக் கண்காணிக்க ஐஸ்வாலில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தைப் பார்வையிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மிசோரம் மட்டுமல்லாமல் மற்ற வட கிழக்கு மாநிலங்களும் இந்த கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 515,000 பேர் மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 2-ம் தேதி நிலவரப்படி, அசாமில் 12,610.27 ஹெக்டேர் நெல், சணல் உள்ளிட்ட பல்வேறு விவசாய பயிர்கள் இந்த வெள்ளத்தால் அழிக்கப்பட்டுள்ளது. 322 அரசு நிவாரண முகாம்களில் 31,212 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் பல்வேறு நிவாரண மையங்களில் 154,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெள்ளத்தில் 1000 கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டதாக அசாம் அரசு மதிப்பிட்டுள்ளது. இதில் 460,000 விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளம் காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்திற்குள் உள்ள 233 முகாம்களில் 53 முகாம்களை வெள்ளத்தில் மூழ்கடித்து வனவிலங்குகளையும் பாதித்துள்ளது.
மே 30 மற்றும் மே 31, 2025 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் மேகாலயா மாநிலத்திலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேகாலயா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவிப்பின் படி 10 மாவட்டங்களில் உள்ள 86 கிராமங்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளன, இதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.