

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்திரில் கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து திரைப் பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று காலை நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
நீட் எதிர்ப்பு போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும் என நேற்று முன்தினம் நள்ளிரவில் பிரதமர் மோடி வீடியோ கால் மூலம் வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டியது அவசியம் என சிஜேபி கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதோடு போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீதான வழக்குகளை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், நீட் தேர்வால் பாதிக்கப்ப்டட மாணவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிஜேபி கட்சியினர் வைத்த மூன்று முக்கிய கோரிக்கைகளில் இரண்டிற்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது குறித்து மத்திய அரசு ஒரு நாள் அவகாசம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று மதியம் 3:30 மணிக்கு மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவுக்குப் பிறகே அமைச்சர் பதவி விலகுவாரா அல்லது இல்லையா என்பது தெரியவரும்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் மாணவர்களுக்கு ஆதரவாக ஜோதிகா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். ஜனநாயக இந்தியாவையும், சீர்திருத்தப்பட்ட கல்வி முறையையும் நான் ஆதரிக்கிறேன். அரசை எதிர்த்து துணிச்சலாக போராடும் மாணவர்கள் மற்றும் சோனம் வாங்சுங் ஆகியோருக்கு எனது பாராட்டுகள்.
தாய்மார்களாகிய நாங்கள் எங்கள் குழந்தைகளை அப்ஜித் தீப்கே மற்றும் சவுரவ் தாஸ் போல உருவாக்க நினைக்கிறோம். Gen Z தலைமுறையை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நாம் அனைவரும் இந்தியாவில் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை மாணவர்கள் நிரூபித்து விட்டார்கள்” என ஜோதிகா பதிவிட்டுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவை எதிர்த்து மாணவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் மாணவர்களைத் தவிர்த்து வேறு யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என சிபிஐ அலுவலகத்தில் நடந்த போராட்டத்தில் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் போராட்டம் நடத்தினால் அது எப்போதும் வெற்றியை மட்டுமே ஈட்டித் தரும் எனவும் அவர் பேசியுள்ளார்.
டெல்லியில் நடக்கும் மாணவர்கள் போராட்டத்தில் சுமார் 2500 பேர் குற்றப் பின்னணியில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற அதிர்ச்சித் தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர். போராட்டத்தில் பொருத்தப்பட்டுள்ள Face Recognition கேமராக்கள் மூலம் அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், போராட்டத்தை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி மாணவர்கள் போராட்டத்தை நிறுத்த வேண்டும் என நேற்று இரவு மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி. இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவில் சம்பந்தப்பட்ட 47 தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர். நீட் பிரச்சினைகளை சரிசெய்ய விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதால், விரைவில் பிரச்சினை முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.