

நாட்டில் மாணவர்களின் கல்விக் கனவை நனவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதில் மிகவும் சிறப்பு வாய்ந்த திட்டம் தான் பிணையம் இல்லாமல் ரூ. 7.5 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கும் வித்யா லட்சுமி திட்டம்.
பணம் இல்லாமல் ஒரு மாணவரின் படிப்பு எந்த சூழ்நிலையிலும் நின்று விடக்கூடாது என்ற ஒற்றைக் காரணத்திற்காக மத்திய அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. பொதுவாக வங்கிகளில் கடன் பெற வேண்டுமெனில் அதற்கு பிணையமாக நகையோ அல்லது சொத்துப் பத்திரங்களையோ வழங்க வேண்டும். வட்டி விகிதம் அதிகம் என்பதால், தனிநபர் கடன்களுக்கு மட்டுமே பிணையம் தேவைப்படாது.
ஆனால் இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் படி, பிணையமே இல்லாமல் மாணவர்களுக்கு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது.
பிணையில்லா கல்விக் கடன் சிறப்பம்சங்கள்:
பிணையம் இல்லாமல் ரூ. 7.5 லட்சம் வரை கடன் கிடைக்கும்.
75% கடன் உத்தரவாதத்தை மத்திய அரசே வழங்கும்.
கல்வி மற்றும் தேர்வுக் கட்டணங்கள், விடுதிக் கட்டணம், லேப்டாப், புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட கல்வி செலவுகளுக்கு கடன் தொகை ஒதுக்கப்படும்.
ஒரு குடும்பத்தில் ஏற்கனவே ஒருவர் கல்விக் கடன் பெற்றிருந்தாலும், அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றொருவரும் கல்விக் கடன் பெற முடியும்.
இளங்கலை படிப்புக்கு கடன் பெற்றவர், அதே வங்கியில் முதுகலைப் படிப்புக்கும் கடன் பெறலாம்.
படிப்பு முடிந்து ஓராண்டு காலம் வரை அசல் தொகையை செலுத்தத் தேவையில்லை. அதற்குப் பிறகு கடனின் அளவைப் பொறுத்து, அதிகபட்சம் 15 ஆண்டுகளுக்குள் மாதத் தவணை முறையில் கடனை திருப்பிச் செலுத்தினால் போதும்.
தகுதியான மாணவர்களுக்கு மத்திய அரசின் வட்டி மானியமும் கிடைக்கும்.
எந்தெந்தப் படிப்புகளுக்கு கடன் கிடைக்கும்?
UGC, AICTE, மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் படிப்புகள்.
இந்தியா மட்டுமின்றி அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுக் கல்லூரிகளில் படிக்கவும் இந்தக் கடனைப் பெறலாம்.
பட்டப்படிப்பு, முதுகலைப் படிப்பு, தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் படிப்புகள் இதில் அடங்கும்
பிணையில்லா கல்விக் கடனுக்கு தேவைப்படும் ஆவணங்கள்:
மாணவர் மற்றும் பெற்றோரின் ஆதார் மற்றும் பான் கார்டு
மதிப்பெண் சான்றிதழ்கள்
உயர்கல்வி பயிலப்போகும் கல்லூரியின் சேர்க்கை கடிதம்
கட்டண விவரங்கள்
வட்டி சலுகைப் பெற விரும்பினால் வருமான சான்றிதழ்
விண்ணப்பிக்கும் முறை:
https://pmvidyalaxmi.co.in/ என்ற இணையதளப் பக்கத்திற்கு செல்லவும்.
Common Education Loan Application Form (CELAF) என்ற படிவத்தில் கேட்கப்படும் அனைத்து விவரங்களை நிரப்ப வேண்டும்.
ஒரே விண்ணப்பத்தில் 3 வங்கிகளுக்கு கல்விக் கடன் பெற விண்ணப்பிக்க முடியும். இதனால் கடனுக்கான ஒப்புதல் விரைவில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அவ்வப்போது இணையதளத்திலேயே சரிபார்த்துக் கொள்ளலாம்.
கல்விக் கடனுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு, மத்திய அரசின் வட்டி மானியத் தொகை PM Vidyalaxmi Digital Rupee App மூலம் உங்கள் கடன் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
வட்டி சலுகை:
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 4.5 லட்சத்திற்குள் இருந்தால், தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை படிப்புகளுக்கு PM-USP-CSIS திட்டத்தின் கீழ், 100% வட்டி மானியம் வழங்கப்படும்.
ஆண்டு வருமானம் ரூ. 4.5 முதல் ரூ. 8 லட்சம் வரை இருந்தால், அனைத்து வகையான உயர்கல்வி படிப்புகளுக்கும் 3% வட்டி மானியம் வழங்கப்படும். ஆனால் கடன் தொகை ரூ. 10 லடசத்திற்குள் இருக்க வேண்டியது அவசியம்.