

நாடு முழுவதும் கடந்த மே 3-ம் தேதி மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. ஆனால் தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், இந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) ரத்து செய்தது. இதனையடுத்து மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் நாளை (ஜூன் 21) நீட் மறுதேர்வு நாடு முழுவதும் நடைபெற உள்ளது. நீட் தேர்வை பாதுகாப்பான முறையில் நடத்த மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதோடு வினாத்தாள் பரவலுக்கு டெலிகிராம் செயலி தான் காரணம் என, அந்த செயலியை தற்காலிகமாக மத்திய அரசு தடை செய்துள்ளது.
இன்று காலை நீட் தேர்வுக்கான ஒத்திகையும் தொடங்கி விட்டது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த மாணவர் அப்துல்லாவுக்கு, அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர், பெற்றோரிடம் தகவலைத் தெரிவித்தார். நாளை நீட் மறுதேர்வு நடைபெற உள்ள சூழலில், அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நீட் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையத்தில் பதிவிறக்கம் செய்து பார்த்த அப்துல்லா என்ற மாணவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஹால் டிக்கெட்டில் தவறுதலாக தேர்வு மையம் அபுதாபி எனக் குறிப்பிடப்பட்டிருந்தைக் கண்டு அதிர்ச்சிக்கு உள்ளானார். இதனைப் பார்த்ததும் உடனடியாக தனது பெற்றோருக்கு தகவலைத் தெரிவித்தார் அப்துல்லா.
மாணவரின் பெற்றோஓர் உடனடியாக தேசிய தேர்வு முகமையை தொடர்பு கொண்டு இதுகுறித்து உதவி கேட்டுள்ளனர். மாணவரின் ஹால் டிக்கெட்டை சரிபார்த்த தேசிய தேர்வு முகமை, இன்று மாலைக்குள் புதிய ஹால் டிக்கெட் வெளியிடப்படும் எனத் தெரிவித்தது. ஹால் டிக்கெட் வெளியான பிறகே தேர்வு மையம் எங்கு என்பது தெரிய வரும்.
நாளை மதியம் 2 மணிக்கு நீட் மறுதேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வு மையம் குறித்த குழப்பத்தில் நாக்பூர் மாணவர் பதற்றத்தில் உள்ளார். ஏற்கனவே ஒருமுறை எழுதிய தேர்வு ரத்தான நிலையில், இந்தத் தேர்வையும் எழுத முடியாமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் மாணவர் இருந்துள்ளார். இருப்பினும் இன்று மாலைக்குள் சரியான ஹால் டிக்கெட்டை வழங்குவோம் என தேசிய தேர்வே முகமை தெரிவித்திருப்பதால், மாணவருக்கு சற்று ஆறுதலாக இருக்கிறது.
இருப்பினும் மாலை வெளியாகும் ஹால் டிக்கெட்டில் தேர்வு மையம் அருகிலேயே இருந்தால், மாணவருக்கு சிரமம் இருக்காது. ஒருவேளை தொலைவில் இருந்தால், மாணவர் தேர்வு மையத்திற்கு குறித்த நேரத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல், பயத்தில் கோபிகா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலை விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாக்பூர் மாணவருக்கு தவறான தேர்வு மையம் அமைக்கப்பட்டது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இம்முறை நீட் தேர்வை எவ்வித அசம்பாவிதமும் இன்றி, பாதுகாப்பாக நடத்த தேசிய தேர்வு முகமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், நாளைய தினம் மருத்துவக் கனவோடு இருக்கும் மாணவர்களுக்கு முக்கிய நாளாக மாறியுள்ளது.