10 நாட்களுக்கு முன்பே லீக் ஆன நீட் வினாத்தாள்! கோடிக்கணக்கில் விற்கப்பட்ட PDF!

நீட் தேர்வு
நீட் தேர்வுSource:abplive
Updated on

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் டெல்லி நீதிமன்றத்தில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை தாக்கல் செய்துள்ளனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மகாராஷ்டிரா மாநில பயிற்சி மைய உரிமையாளரின் மொபைல் போனிலிருந்த 136 கேள்விகளில் 111 கேள்விகள் தேசிய தேர்வு முகமையின்(NTA) அசல் வினாத்தாளுடன் அப்படியே ஒத்து போய் உள்ளதாக டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ அதிரடியாக தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரைச் சேர்ந்த தனியார் பயிற்சி மைய உரிமையாளர் சிவராஜ் ரகுநாத் மோடேகோங்கர், என்.டி.ஏ (NTA) குழு உறுப்பினரும், வினாத்தாள் மொழிபெயர்ப்பாளருமான பி.வி. குல்கர்னி என்பவருக்கு ₹5 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார். வினாத்தாள் தயாரிப்பாளரான பி.வி. குல்கர்னி மூலமாகத்தான் இந்த வினாத்தாள் கசிந்ததாகச் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

சிவராஜ் மோடேகோங்கரின் கைப்பேசியில் இருந்து வேதியியல்(Chemistry) பாடத்திற்குரிய 132 கையெழுத்துப் பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 111 கேள்விகள் தேசியத் தேர்வு முகமை தயாரித்த நீட் தேர்வுக்கான என்.டி. ஏ -வின் முதன்மை வினாத் தொகுப்புடன்(Master set) நேரிடையாக பொருந்தியுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. லீக் செய்யப்பட்ட இந்த வினாத்தாள் பி.டி.எஃப்(PDF) வடிவில் டெலிகிராம் செயலி மூலம் ரூபாய் 10 லட்சத்திற்கு விற்கப்பட்டதாக சிபிஐ கண்டறிந்துள்ளது.

சிபிஐ சார்பில் ஆஜரான மூத்த அரசு வழக்கறிஞர் நீது சிங், நீட் யூஜி 2026 தேர்வு நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த தேதிக்கு வெகு முன்னதாக, அதாவது ஏப்ரல் 23, 2026 அன்றே, மே 3 நீட் தேர்வு நடப்பதற்கு கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு முன்பாகவே கசிந்துள்ளது சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது. விசாரணையின் பொழுது நீதிமன்றத்தின் கேள்விக்கு பதில் அளித்த புலனாய்வு அதிகாரி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றத்தை நிரூபிக்கும் வகையில் டிஜிட்டல் ஆதாரங்களை சுட்டிக் காட்டினார். சிவராஜ் மோடேகோங்கர், தான் வழங்கிய கேள்விகள் உண்மையான தேர்வு தாளில் இடம்பெறும் என்று மாணவர்களிடம் கூறுவது போன்ற ஒரு காணொளிப் பதிவு இருப்பதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த முறைகேடு புகார்களைத் தொடர்ந்து மே 12ஆம் தேதியே இந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, பின்னர் ஜூன் 21ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Neet exam
Neet exam

இதுவரை இந்த வழக்கில் டெல்லி, ஜெய்ப்பூர், குர்கான், நாசிக், புனே, அகில்யநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 13 முக்கிய நபர்கள் (ஆசிரியர்கள், இடைத்தரகர்கள், பயிற்சி மைய உரிமையாளர்கள்) கைது செய்யப்பட்டு டெல்லி நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நீதிமன்றக் காவல் தற்பொழுது ஜூலை 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட் யுஜி 2026 வேதியியல் வினாத்தாளைக் கசிய விட்ட சதியில் முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்படும் மோடேகோங்கரின் ஜாமீன் மனுவைச் சிபிஐ கடுமையாக எதிர்த்துள்ளது.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவராஜ் ரகுநாத் மோடேகோங்கர், தேஜஸ் ஹர்ஷத் குமார் ஷா, தினேஷ் பிவால், விகாஸ் பிவால், மங்கி லால் பிவால், மனிஷா மன்தார், யாஷ் யாதவ், பிரஹலாத் குல்கர்னி, டாக்டர் மனோஜ் ஷிரூரே, தனஞ்சய் லோகாண்டே ஆகியோரின் நீதிமன்றக் காவலை ஜூலை 24 வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மொபைலில் பார்த்தால் மேஜிக் கிடைக்காது! இந்த படங்களை தியேட்டர்ல போய் பாருங்க!
நீட் தேர்வு
இதையும் படியுங்கள்:
சூப்பர் நியூஸ்..! தமிழகத்தில் 2,000 ஏசி பேருந்துகளை களமிறக்கும் முதல்வர்.!
நீட் தேர்வு
logo
Kalki Online
kalkionline.com