மாநில அளவில் முதலிடம்! நீட் மறுதேர்வில் 720க்கு 705 பெற்று சாதனை புரிந்த வெங்கடபதி வேலாயுதம்!

அகில இந்திய அளவில் 12-வது இடம் பிடித்து அசத்தல்; தேசிய அளவில் டாப் 138 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த 12 மாணவர்கள்!
நீட் மறுதேர்வு
நீட் மறுதேர்வுSource:abplive
Updated on

2026ம் ஆண்டு நடைபெற்ற தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வில் அகில இந்திய அளவில் 12-வது இடத்தைப் பிடித்துள்ளார் வெங்கடபதி வேலாயுதம் வி.ஏ. மேலும் இவர் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தேசிய தேர்வு முகமை(NTA)வெளியிட்டுள்ள நீட் மறுதேர்வு முடிவுகளில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் வெங்கடபதி வேலாயுதம் வி.ஏ. தமிழக அளவில் முதல் இடம் பிடித்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் 720க்கு 705. அகில இந்திய தரவரிசைப்படி தேசிய அளவில் 12 வது இடத்தை பிடித்துள்ளார். இவர் 99.99915% சதவீத புள்ளிகளுடன்(percentile) மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஜூன் 21 அன்று மாநிலம் முழுவதும் 307 மையங்களில் நடைபெற்ற நீட்-யுஜி 2026 மறுதேர்விற்கு தமிழ்நாட்டில் இருந்து சுமார் 1.42 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார்கள். இருப்பினும் மே 3ஆம் தேதி அன்று நடைபெற்ற நீட் தேர்வில் 95% வருகைப் பதிவாக இருந்தது மறுதேர்வின் பொழுது வருகைப்பதிவு சுமார் 75% ஆகக் குறைந்துள்ளது. நாடு முழுவதும் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய தேர்வு, வினாத்தாள் கசிந்ததன் காரணமாக ரத்து செய்யப்பட்டு மீண்டும் ஜூன் 21 அன்று இந்த மறுதேர்வு நடத்தப்பட்டது.

தேசியத் தேர்வு முகமையால் (NTA) வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளின்படி, இந்தியா முழுவதிலும் இருந்து 720 மதிப்பெண்களுக்கு 705 மற்றும் அதற்கு மேல் பெற்ற 17 தேர்வர்களில், தமிழகத்திலிருந்து இடம்பெற்ற ஒரே தேர்வர் வெங்கடபதி வேலாயுதம் மட்டும்தான். ஆனால் தேசிய அளவில் 690 மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் பெற்ற 138 பேரில் 12 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

138 மாணவர்கள் 720க்கு 690 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர். 690 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றவர்களில் 93% க்கும் அதிகமானோர் முதல் முறையாக இந்தத் தேர்வை எதிர்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 99% பேர் 17-19 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 17 முதல் 19 வயதுடைய மாணவர்கள் தான் இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

720க்கு 715 என்ற அதிகபட்ச மதிப்பெண்ணைப் பெற்றவர்கள் பஞ்சாபைச் சேர்ந்த ஆர்யன் குப்தாவும், ஹரியானாவைச் சேர்ந்த பன்ஷுல் பன்சலும் ஆவார்கள். இவர்களை தேசிய அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

பொது பிரிவில் இருந்து 2.91 லட்சம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து 5.12 லட்சம், எஸ்.சி பிரிவில் இருந்து 1.59 லட்சம், எஸ்.டி பிரிவிலிருந்து 63,716, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவிலிருந்து 95,026 பேர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

neet
neet

தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்ட சுமார் 20 லட்சம் தேர்வர்களில் 11.21 லட்சம் பேர் இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு தகுதி பெற்றனர்.

அதாவது தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தகுதி பெற்றவர்களில் 58%க்கும் அதிகமானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அளவில் 690 மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் பெற்ற 138 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் இடம் பெற்றுள்ளனர். வெங்கடபதியைத் தவிர மற்றவர்கள் பெயர்:

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீனிகா வி. 27 வது இடத்தையும், சுதர் எனும் மாணவன் தேசிய அளவில் 45 வது இடத்தையும், வனிஷா சதீஷ் 51-வது இடத்தையும், சபரி என்ற மாணவன் 59 வது இடத்தையும், ஆர்.ஜெய் கிருஷ்ணா எனும் மாணவன் 75ஆவது இடத்தையும், சம்விதா என்ற மாணவி 82 வது இடத்தையும், நவீதனா 88-வது இடத்தையும், ஜனனி 112 வது இடத்தையும், ரோகித் மேத்யூ 115 வது இடத்தையும் மற்றும் ஒரு ஜே.ஜெய் கிருஷ்ணா எனும் மாணவன் 134 வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

மருத்துவ சேர்க்கை மற்றும் கலந்தாய்வு செயல்முறைகள் திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, முடிவுகள் சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்டதாக தேசிய மருத்துவ ஆணையம் (NTA) தெரிவித்துள்ளது.

யார் இந்த வெங்கடபதி வேலாயுதம்..?

வெங்கடபதி வேலாயுதம் சென்னை பொன்னேரியில் உள்ள வேலம்மாள் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்றவர். இவர் இத்தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்களையும், கட் ஆப் அடிப்படையில் 99.99915 சதவீத மதிப்பெண்களையும் பெற்று, தென்னிந்திய அளவில் அசத்தியுள்ளார்.இவரது தந்தை விழுப்பரத்தை சேர்ந்த பிரபல எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவர் அஞ்சன் ராமச்சந்திரநாத்.

இதையும் படியுங்கள்:
ஒரு சாதாரண மெஸ் ஓனர் முதலமைச்சர் மகனாக மாறினால்? நாளை ஓடிடி-யில் வெளியாகிறது தர்ஷனின் 'தி டெவில்'..!
நீட் மறுதேர்வு
இதையும் படியுங்கள்:
ஆடிப்பெருக்கு முதல் கருட பஞ்சமி வரை: இந்த ஒரு மாதத்தில் இத்தனை ஆன்மீக திருநாட்களா?
நீட் மறுதேர்வு
logo
Kalki Online
kalkionline.com