

திரையரங்குகளுக்கு கூட்டமாக சென்று, 3 மணி நேரம் பொறுமையாக அமர்ந்து படம் பார்க்கும் வழக்கம் தற்போது மக்களிடையே குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், வீட்டின் வரவேற்பறைக்கே தேடி வரும் ஓடிடி (OTT) வெளியீடுகள் தான். திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்களை கூட, ஓடிடி தளங்களில் வெளியாகும் வரை காத்திருந்து பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் ஓடிடி ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான மாதமாக இந்த ஜூலை அமைந்துள்ளது எனலாம். தியேட்டர்களில் குடும்பங்களை நெகிழ வைத்த , மிரள வைத்த மற்றும் சிரிக்க வைத்த பல முக்கியத் தென்னிந்தியத் திரைப்படங்கள் முன்னணி ஓடிடி தளங்களில் தடம் பதிக்கின்றன. மொழிகளைக் கடந்தும் சப்டைட்டில் மூலம் நாமும் நல்ல படங்களை ரசிக்கத் தயாராகிறோம்.
சமீப காலமாகவே அமேசான் பிரைம், நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஓடிடி தளங்கள் கதையம்சம் மிக்க தென்னிந்திய திரைப்படங்கள் மீது அதீத ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக, பான்-இந்தியா அளவில் தென்னிந்திய கதைகளுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வரவேற்பு ஓடிடியின் வணிக நிலையையும் மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு சான்றாக இந்த மாதத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிப் படங்களின் ஆதிக்கமே அதிகளவில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பெரிய திரையில் வெளியான சில வாரங்களுக்குள் பல வெற்றிப் படங்கள் டிஜிட்டல் திரைக்கு வருவது சினிமா பிரியர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. அந்த வகையில், கன்னடத்தில் தயாராகி பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டான அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘தி டெவில்’ (The Devil), ஜூலை 17 (நாளை) முதல் ஜீ5 (ZEE5) தளத்தில் வெளியாகிறது.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் தர்ஷன் இரட்டை வேடங்களில் நடித்து, தியேட்டர்களில் ₹43 கோடிக்கும் மேல் வசூலித்த திரைப்படம் இது. வழக்கமாக, நாம் கற்பனையில் நினைத்து பார்க்கும் கேங்ஸ்டர் படங்களை ஆவலுடன் பார்ப்போம். அந்த வகையில் ‘தி டெவில்’ திரைப்படமும் ஒரு மாஸான கேங்ஸ்டர் படமாக அமைந்துள்ளது.
கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா ஒரு கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருப்பதாகக் கூறப்படும் நிலையிலும் அவரது ரசிகர்கள் படத்தைக் கொண்டாடும் விதமாக முதல் நாள் முதல் காட்சிக்குத் திரண்டது மற்றும் எக்ஸ் தளத்தில் வெளியான ஆரம்பகட்ட விமர்சனங்கள், கலவையான வரவேற்பை காட்டுகின்றன. சிலர் தர்ஷனின் நடிப்பைப் பாராட்டிய அதே வேளையில், மற்றவர்கள் படத்தின் முதல் பாதியில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒரு சாதாரண மெஸ் உரிமையாளரான கிருஷ்ணா, ஊழல் வழக்கில் சிறைக்குச் செல்லும் முதலமைச்சரின் மகனைப் போல ஆள்மாறாட்டம் (Impersonate) செய்து அரசியல் சூழ்ச்சிகளுக்குள் சிக்குவதே இதன் கதை. நிஜ வாழ்க்கையில் தர்ஷன் எதிர்கொண்டு வரும் நீதிமன்ற வழக்குகளுக்கு மத்தியில், அவரது ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பெரிய அறிவிப்பாக அமைந்துள்ளது.படத்தின் கதை அரசியல், இரட்டை வேடம் மற்றும் ஆக்சன் என பல தளங்களில் பயணிக்கிறது.
கிருஷ்ணா என்ற எளிமையான, நேர்மையான இளைஞர் சிறிய உணவகத்தை நடத்தி வாழ்கிறார். மறுபுறம், தனுஷ் என்ற முதல்வரின் மகன் ஆவேசம், வன்முறை, அதிகார துஷ்பிரயோகம் ஆகிய தீய செயல்களை கைக்கோண்டவனாக வருகிறான்.சில அரசியல் சூழ்ச்சிகளால், கிருஷ்ணாவை தனுஷைப் போல ஆள்மாறாட்டம் செய்ய வைக்கிறார்கள். இதன் மூலம் அரசியல் அதிகாரப் போட்டி, ஊழல், பழிவாங்கல் ஆகியவை தீவிரமடைகின்றன. அதே நேரத்தில், ருக்மிணி எனும் இளம் பெண்ணுடன் கிருஷ்ணாவுக்கு காதல் மலர்கிறது. இந்நிலையில் உண்மையான தனுஷ் திரும்பி வந்ததால், ஒரே தோற்றமுள்ள இரு மனிதர்களை சுற்றி மோதல்களும் அரசியல் சதிகளும் அரங்கேறுகின்றன. இறுதியில் நீதியும் உண்மையும் வென்றதா அல்லது அதிகாரப் பசியில் அலையும் "டெவில்" வென்றதா என்பதே மீதிக்கதை.
இயக்குநர் பிரகாஷ் வீர் இயக்கியுள்ள இந்த படத்தில் ரச்சனா ராய் (Rachana Rai), மகேஷ் மஞ்ச்ரேகர், அச்சுத் குமார், ஷர்மிளா மாண்ட்ரே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் முழுக்க முழுக்க திருப்பங்கள் நிறைந்த மாஸ் எண்டர்டெய்னராக உருவாக்கப்பட்டிருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அரசியல் அதிரடி திரைப்படமான இதில், நட்சத்திர ஹீரோவான தர்ஷன் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தாலும், வழக்கமான திரைக்கதை, பலவீனமான எழுத்து மற்றும் சுமாரான திரைக்கதை வேகம் ஆகியவை விமர்சகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.அரசியல், காதல், நன்மை மற்றும் தீமை இடையேயான மோதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதையில் முதல் பாதி விறுவிறுப்பாக இருந்தாலும், பிற்பகுதி மந்தமாகவும், தளர்வான எடிட்டிங்குடனும் இருப்பதாகக் குறைகள் கூறப்பட்டன. தர்ஷன் தனது இரட்டை வேடங்களில் சிறப்பாக நடித்திருந்தாலும் அவரது தோற்றம் மற்றும் சில காட்சிகள் குறைபாடுகளுடன் இருந்ததாகக் கருத்துக்கள் நிலவுகின்றன. அச்சுத் குமார் உள்ளிட்ட துணை நடிகர்களின் நடிப்பு படத்துக்கு பலமாக இருந்தது.
அதேபோல் படத்துக்கு பக்கபலமாக இருக்க வேண்டிய இசை பற்றிய விமர்சனமும் எழுந்தது. இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் இசையில் சில பாடல்கள் ரசிக்கத்தக்கதாக இருந்தாலும், பின்னணி இசை மிகைப்படுத்தப்பட்டதாக இருந்ததாகவும் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
தர்ஷன் (வழக்கில் சிக்கி) கடைசியாக நடித்த படம் என்பதால் கன்னட ரசிகர்களுக்கு இந்தப் படம் பெரும் ஆவலாக இருந்தது எனலாம். படம் வெளியாவதற்கு முன்னதாக சிறையிலிருந்து தர்ஷன் , ரசிகர்களுக்கு ட்வீட் மூலம் அனுப்பிய செய்தி, படத்திற்கான உணர்வுப்பூர்வமான ஆதரவை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.
"அந்தக் குறிப்பில், நடிகர் தனது அயராத விளம்பரப் பணிகளுக்கும் அசைக்க முடியாத அன்புக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். வதந்திகளாலோ அல்லது எதிர்மறையான பேச்சுகளாலோ ரசிகர்கள் பாதிக்கப்பட வேண்டாம் என்றும், இந்த சவாலான காலகட்டத்தில் அவர்களின் விசுவாசமே தனது மிகப்பெரிய பலம் " என்றும் அவர் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, படத்தின் வெற்றியின் மூலம், அவர்களின் ஒற்றுமையும் ஆதரவும் வார்த்தைகளை விட உரக்கப் பேசும் என்று தர்ஷன் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது படத்தின் வெற்றியை ஊக்குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நாமும் ஜூலை 17 நாளை ஓடிடியில் தி டெவிலைப் பார்த்து ரசிப்போம் .