

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து அனைவரும் மதிக்கும் வகையில் ஆளாக்குகின்றனர். ஆனால் பிள்ளைகள் நல்ல வேலை, வருமானம் கிடைத்து நல்ல நிலைமைக்கு வந்தவுடன் பெற்றோர்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். வயதான காலத்தில் பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் பெற்றோர்கள், தள்ளாத வயதில் உழைக்க சக்தி இல்லாமல் யாசகம் பெற்று உயிர்வாழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இந்நிலையில் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பெற்றோர்களை கவனிக்க தவறும் அரசு ஊழியர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு கடமை எவ்வளவு முக்கியமோ அதே போல் அவர்கள் குடும்பமும் முக்கியம் என்பதை மறந்து விடக்கூடாது. பிள்ளைகள் பெற்றோர்களை கவனிக்காமல் கைவிடும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
எனவே அரசு ஊழியர்கள், ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களின் பெற்றோர்களை புறக்கணித்தால் அவர்களின் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.
பிடித்தம் செய்யப்படும் சம்பளம் பெற்றோர்களின் நேரடி வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்படும். அரசு ஊழியர்களான நீங்கள் மாத சம்பளம் பெறும்பொழுது உங்கள் பெற்றோரும் மாதச் சம்பளம் பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம் என ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
மேலும், நீங்கள் எந்த ஒரு அதிகார பதவியில் இருந்தாலும் உங்களின் பெற்றோரையோ அல்லது சொந்த ஊரையோ மறந்துவிடாதீர்கள். உங்களின் முன்பு ஒரு ஏழை நிற்கும் பொழுது, அவர்களை ஒரு அரசாங்க அதிகாரி முன் உங்கள் பெற்றோர் இருப்பதாக நினைத்துப் பாருங்கள். பெற்றோர்களுக்கு உபயோகப்படாதவர்கள், சமூகத்திற்கும் பயன்பட மாட்டார்கள். இந்தச் சட்டம் தண்டனையாக அல்ல, மாறாக பெற்றோரின் தியாகங்களுக்கு நீதி வழங்கும் முயற்சியாக இருக்கும் என்றார்.
மேலும், இதனை கண்காணிக்க உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் தனிக்குழு அமைக்க தலைமைச் செயலாளர் கே. ராமகிருஷ்ண ராவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, மாற்றுத் திறனாளிகள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொண்டால் அந்த ஜோடிக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அதே சமயத்தில் மாற்றுத் திறனாளியை திருமணம் செய்பவருக்கும் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் கூறினார்.
மேலும்,அரசுப் பணியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதேபோன்று விளையாட்டு துறையில் சாதிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசு பணி ஒதுக்கப்படுகிறது. மேலும் மூன்றாம் பாலினத்தவருக்கும் அரசு பணியில் இட ஒதுக்கீடு, ‘இந்திராம்மா வீடு’கள் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.