

பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்ட ரூ.3 ஆயிரம் பரிசு பணத்தை மணியார்டர் மூலம் தலைமை செயலகத்திற்கு அனுப்பி வைத்தார் நெல்லை மாவட்டம் கருத்தப்பிள்ளையூர் கிராமத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர்.
அதன் பின் கிறிஸ்டோபர் கூறியதாவது:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளியவர்கள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாட பரிசு தொகுப்போடு ரூ.3 ஆயிரம் ரொக்கம் வழங்கினார்.அதை நான் பொங்கல் பண்டிகைக்கு 2 நாள் முன்பாக ரேஷன் கடையில் பெற்றுக்கொண்டேன். ஆனால், தமிழக அரசு தற்போது எதிர்கொண்டுள்ள நிதிச் சுமையை உணர்ந்து, அந்தப் பணத்தை அரசுக்கே திருப்பித் தர முடிவு செய்தேன்.
தற்போது தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது. எனது வீட்டை எப்படி நேசிக்கிறேனோ, அதேபோல் எனது நாட்டையும் நேசிக்கிறேன். எனவே, இந்த நிதி சுமையை சமாளிக்க எனது பங்களிப்பாக இந்த பணத்தை அரசுக்கே திருப்பிக் கொடுக்க விரும்புகிறேன். இதற்காக சென்னை தலைமை செயலகத்தின் முகவரிக்கு தபால் நிலையம் வழியாக மணியார்டர் மூலம் ரூ. 3,000 அனுப்பி வைத்துள்ளேன்" என உருக்கமாக தெரிவித்தார்.
"ஒவ்வொரு ஆண்டும் அரசு இது போன்ற பண உதவிகளை வழங்கும்போது, நிதிச் சுமையை கருதி நான் வாங்காமல் விட்டுவிடுவேன். ஆனால், அவ்வாறு வாங்காமல் விடும் பணம் மீண்டும் அரசு கஜானாவிற்கு சரியாக போய் சேருமா என்பதில் எனக்குச் சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகத்தை தீர்க்கவே, இந்த முறை ரேஷன் கடையில் பணத்தை பெற்று நானாகவே தபால் மூலம் அரசுக்கு அனுப்பி வைத்தேன்" என்றார். இவரது இந்த நெகிழ்ச்சியான செயல் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.