திரிசூலி ஆற்றில் வெள்ள அபாயம்: நேபாளத்தில் மீட்பு பணி நிறுத்தம் - 57 தமிழர்களின் நிலை என்ன?

nepal disaster
nepal disastersource:indianexpress
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி மாயமான சுமார் 2,500 பேரைத் தேடும் பணி 4வது நாளாக தொடரும் நிலையில், திரிசூலி பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாயமாகியுள்ள 320 இந்தியர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என இந்திய வெளியுறவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணியைத் தொடர முடியவில்லை. கோசி ஆற்றின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பனிமலை சரிவு காரணமாக (glacier collapse) கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 26) திரிசூலி மற்றும் போட்டே கோசி (Bhote Koshi) ஆற்றுப்பகுதிகளில் பெரும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தால் இதுவரை நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். 2,500 க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.அப்பகுதியில் இருந்த ஹோட்டல்கள், வீடுகள், கடைகள்,பாலங்கள் என அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

தொடர் மழையால் திரிசூலி ஆற்றில் வெள்ள நீர் அபாயக் கட்டத்தைத் தாண்டி மீண்டும் உயர்ந்து வருகிறது. மோசமான வானிலையால் மீட்புப் பணிக்கு பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அப்பகுதியில் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எல்லையோரப் பகுதியில் ஏற்பட்ட இடிபாடுகளால் உருவான தற்காலிக ஏரி உடைந்து, மீண்டும் ஒரு பெரும் வெள்ளம் வரக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வானிலை மோசமடைவதற்கு முன்பு, நேபாள ராணுவம் மற்றும் தனியார் துறையால் இயக்கப்படும் 16 ஹெலிகாப்டர்கள் துன்சே, திரிசூலி, திமுரே மற்றும் சியாப்ருபேசி ஆகியப் பகுதிகளைக் கடந்து 99 முறை ஹெலிகாப்டர் பயணங்களை வெற்றிகரமாக முடித்திருந்தன. ஹெலிகாப்டர் மூலம் 517 பேர் மீட்கப்பட்டதாக பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்தார்.

ரக்ஷா பந்தன் அன்று முகநூலில் பகிரப்பட்ட உரையில், ரசுவா மற்றும் போதே கோஷி-திரிசூலி வழித்தடம் உள்ளிட்ட பிற பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்காக 15,431 பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஷா தெரிவித்தார். இந்தப் படைப்பிரிவில் 6,755 நேபாள ராணுவ வீரர்களும், 4,473 நேபாள காவல்துறை வீரர்களும், நேபாள ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த 4,203 வீரர்களும் அடங்குவார்கள். இதுவரை 4,451 பேர் மீட்கப்பட்டுள்ளதாக ஷா தெரிவித்துள்ளார். அவர்களில் நீர்மின் சுரங்கங்களில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட 191 தொழிலாளர்களும் அடங்குவர்.

ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கியுள்ள இந்த பெரும் துயரத்தில், தமிழகத்தில் இருந்து ஆன்மிக யாத்திரை சென்ற 100 பேர் உட்பட, 300க்கும் அதிகமான இந்தியர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.வெள்ளத்தில் மாயமாகி இருக்கும் இந்தியர்கள் 320 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

nepal disaster
nepal disastersource:the print

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"நேபாள வெள்ளத்தில் மாயமான இந்தியர்களில் இதுவரை 84 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 149 இந்தியர்கள் சீன எல்லையைக் கடந்து நேபாளத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர். சீனாவில் 400 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ள நிலையில், 320 இந்தியர்களை இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

10 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு:

இதனிடையே, நேபாளத்தில் மனிதாபிமான அடிப்படையிலான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பணிகளை இந்தியா தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 10 டன் அத்தியாவசிய நிவாரண பொருட்களுடன் இந்திய விமானப் படையின் C-130 ரக விமானம் நேபாளத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தற்போதைய நிலவரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்:

பெருக்கெடுத்து ஓடும் ஆற்றை சுற்றியுள்ள ஆற்றுப் படுகைகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாகப் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

தற்காலிகப் பணிகள் நிறுத்தப்பட்டாலும், நேபாள அரசு சுமார் 15,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்களை பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் பணியில் அமர்த்தி உள்ளது. அத்துடன் நீர்மின் சுரங்கங்களில் சிக்கியிருந்த 191 தொழிலாளர்கள் உட்பட இதுவரை 4,451 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த வெள்ள பாதிப்பில் தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 57 பேரும் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
நேபாளில் வெள்ளம் வந்தது எப்படி? வெளியானது அதிர்ச்சி காரணம்.! மீண்டும் வெள்ளம் வர வாய்ப்பு இருக்கா.?
nepal disaster
logo
Kalki Online
kalkionline.com