

நேபாளத்தில் நேற்று (ஆகஸ்ட் 26) திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் வீடுகள், சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த வெள்ளப் பெருக்கில் இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 1,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேபாளத்திற்கு உதவும் வகையில் இந்தியா சார்பாக அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நேபாள மக்களின் துயர் துடைக்க தற்போது ஐநாவும் களத்தில் இறங்கியுள்ளது.
வெள்ளம் ஏற்பட்டது எதனால்?
நேபாள் - திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்திற்கு பனிப்பாறை ஏரி உடைப்பே காரணமாக இருக்கும் என நேபாள் வானிலை ஆய்வை மையம் தெரிவாத்துள்ளது. நாராயணி மற்றும் கண்டக் நதிகளின் கரையோரத்தில் வாழும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதோடு இந்திய எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கும் நேரடி ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
குழப்பத்தில் ஆய்வாளர்கள்:
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கு முக்கிய காரணம் எது என்பதைக் கண்டறியும் தேடலில் ஆய்வாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ரசுவா பகுதியில் பெருமழை எதுவுமே பெய்யாத நிலையில், இவ்வளவு தண்ணீர் எங்கிருந்து எப்படி வந்தது என ஆய்வாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
திபெத் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மண்சரிவு ஏற்பட்டே, பிரம்மாண்ட ஏரி உடைந்ததால் தான் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
2-வது வெள்ளம்:
வானிலை மையம் மற்றும் ஆய்வாளர்களின் கருத்து வேறு வேறாக இருக்கும் சூழலில், மீண்டும் 2வது முறையாக வெள்ளம் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பன்னாட்டு மலைப்பகுதிகள் மேம்பாட்டு அமைப்பு விடுத்த எச்சரிக்கையில், “ல்ஹெண்டே கோலா நதியின் மேல் பகுதியில் இன்னமும் அடைப்பு இருப்பதால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும், 2வது முறையாக பெருவெள்ளம் ஏற்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த 130 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு யாத்திரைக்காக தமிழ்நாட்டில் இருந்து 80-க்கும் மேற்பட்டோர் நேபாளம் சென்றதால், அவர்களைப் பற்றிய தகவல் இன்னும் கிடைக்கவில்லை. உத்தரகாண்ட் மற்றும் உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள நேபாள எல்லைப் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது மத்தய அரசு.
நேபாள் வெள்ளத்தால் இந்தியாவின் பீகார் மாநிலத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்த ஆலோசனையில் ஈடுபட்டார். மத்திய அரசின் ஆணைப்படி தற்போது பீகாரில் பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
கும்பகோணத்தில் இருந்து நேபாளத்திற்கு சென்ற 57 பேரில் 21 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மீதமுள்ள 36 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோவை ஈஷா மையம் சார்பில் 700-க்கும் மேற்பட்டோர் யாத்திரைக்கு சென்ற நிலையில் அதில் 80 பேர் குறித்த நிலைமை என்னவென்று தெரியவில்லை என ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். என்னையும், என் குழுவையும் கீரங் பகுதிக்கு சென்று மீட்புப் பணியை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேபாளத்தையும், சீனாவையும் இணைக்க ரூ.89 கோடி செலவில் ஃபிரண்டஷிப் பிரிட்ஜ் ஈன்ற பாலம் கடந்த ஆண்டு தான் கட்டப்பட்டது. நேற்று ஏற்பட்ட வெள்ளத்தில் இந்தப் பாலம் நொடிப் பொழுதில் அடித்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது..