இந்த 3 வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்..? ஏப்ரல் 1 முதல் புதிய ATM விதிகள் அமல்..!

வரும் ஏப்ரல் 1 முதல் உங்களின் வங்கிப் பணப்பரிவர்த்தனைகளில் இந்த மூன்று வங்கிகளும் சில முக்கிய மாற்றங்களை கொண்டு வரவுள்ளது.
ATM and UPI
ATM and UPI
Published on

வரும் ஏப்ரல் 1 முதல் இந்த மூன்று வங்கிகளின் பணப்பரிவர்த்தனைகளில்(ஏடிஎம் மற்றும் யூபிஐ (UPI) விதி) சில முக்கிய மாற்றங்கள் வரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது எச்டிஎப்சி (HDFC), பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மற்றும் பந்தன் வங்கி (Bandhan Bank) ஆகிய முன்னணி வங்கிகள் தங்களது ஏடிஎம் மற்றும் யூபிஐ (UPI) விதிகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் இந்த புதிய மாற்றத்தை கவனத்தில் கொண்டு அபராதத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எச்டிஎப்சி வங்கி:

எச்டிஎப்சி வங்கி (HDFC Bank) இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கி மற்றும் உலகின் 10-வது பெரிய வங்கியான (2025 நிலவரப்படி) இது, மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இது மொபைல் பேங்கிங், கடன்கள், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.

இதுவரை வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் யூபிஐ (UPI QR Code) மூலம் பணம் எடுப்பதை சாதாரண ஏடிஎம் கார்டு பரிவர்த்தனையாகக் கருதாமல் இருந்த எச்டிஎப்சி வங்கி, வரும் ஏப்ரல் 1 முதல், யூபிஐ மூலம் எடுக்கப்படும் பணமும் உங்களின் மாதந்திர 'இலவச ஏடிஎம் பரிவர்த்தனை' கணக்கிலேயே சேர்க்கப்படும் என அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
கோடக் வங்கி கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்..? அப்போ உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி..!
ATM and UPI

ஒருவேளை வாடிக்கையாளர்கள் இலவச வரம்பைத் தாண்டும்பட்சத்தில், ஒவ்வொரு முறை யூபிஐ மூலம் பணம் எடுக்கும்போதும் ரூ.23 மற்றும் அதற்கான வரிகளை கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இனி கார்டு இல்லாமல்தானே பணம் எடுக்கிறோம் என்று நினைத்து வாடிக்கையாளர்கள் அடிக்கடி யூபிஐ பயன்படுத்தினால், அது கூடுதல் செலவில் போய் முடியும் என்பதை மறக்க வேண்டாம்.

பஞ்சாப் நேஷனல் வங்கி:

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகும். இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களின் சில குறிப்பிட்ட டெபிட் கார்டுகளுக்கான தினசரி பணப்பரிவர்த்தனை வரம்பை பாதியாகக் குறைத்துள்ளது.

அந்த வகையில், ரூபே என்.சி.எம்.சி. பிளாட்டினம் (உள்நாட்டு மற்றும் சர்வதேசம்), ரூபே வுமன் பவர் பிளாட்டினம், ரூபே பி.என்.பி. பலாஷ், ரூபே பிசினஸ் பிளாட்டினம் என்.சி.எம்.சி., மாஸ்டர்கார்டு பிளாட்டினம், விசா கோல்ட் மற்றும் பி.என்.பி. மாஸ்டர்கார்டு பிளாட்டினம் ரைஸ் ஆகிய கார்டுகளுக்கு தினசரி வரம்பு ரூ.50,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ரூபே செலக்ட் டெபிட் கார்டு, பிஎன்பி ரூபே செலக்ட் நியோ/எக்செல், விசா சிக்னேச்சர் மற்றும் மாஸ்டர்கார்டு பிசினஸ் டெபிட் கார்டுகளுக்கான வரம்பு ரூ.75,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு இந்த டெபிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பெரிய தொகைகளை ஏடிஎம் மூலம் எடுக்க இனி முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்.

அதுமட்டுமின்றி மற்றொரு முக்கிய அறிவிப்பையும் இந்த வங்கி விடுத்துள்ளது. அதாவது, கடந்த 3 ஆண்டுகளாக எந்தப் பரிவர்த்தனையும் நடைபெறாத மற்றும் கணக்கு இருப்பு பூஜ்ஜியமாக உள்ள வாடிக்கையாளர்கள், ஏப்ரல் 15-ம் தேதிக்கு முன்னர் தங்கள் வங்கி கிளைக்குச் சென்று KYC சரிபார்ப்பு செய்துகொள்ள வேண்டும் என்றும் அப்படி செய்யாத வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள் ஏப்ரல் 16 முதல் எந்த அறிவிப்பும் இல்லாமல் மூடப்படும் என்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.

பந்தன் வங்கி:

2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று தொடங்கப்பட்ட பந்தன் வங்கி (Bandhan Bank) இந்தியாவின் ஒரு முன்னணி தனியார் துறை வங்கியாகும். கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட இந்த வங்கி ஆரம்பத்தில் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனமாகத் தொடங்கி, தற்போது நாடு முழுவதும் 6,300-க்கும் மேற்பட்ட கிளைகளுடன், கிராமப்புற மற்றும் நடுத்தரப் பிரிவினருக்குச் சேவைகளை வழங்கி வருகிறது.

பந்தன் வங்கியின் புதிய விதிகளின்படி, வாடிக்கையாளர்கள் அந்த வங்கியின் ஏடிஎம்களில் 5 முறை இலவசமாகப் பணப் பரிவர்த்தனை செய்யலாம். மற்ற வங்கிகளின் ஏடிஎம்களைப் பயன்படுத்தும்போது, சென்னை, பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்களுக்கு 3 முறையும், மற்ற ஊர்களில் இருப்பவர்களுக்கு 5 முறையும் மட்டுமே இலவச அனுமதி வழங்கப்படும்.

இந்த வரம்பை மீறினால், ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் ரூ.23-ம், பேலன்ஸ் செக் செய்வது போன்ற பணமல்லாத இதர சேவைகளுக்கு ரூ.10ம் கட்டணமாக வசூலிக்கப்படும். முக்கிய விஷயமாக, வாடிக்கையாளர் தங்கள் கணக்கில் போதுமான பணம் இல்லாமல் ஏடிஎம்மில் கார்டைச் செருகி, பரிவர்த்தனை தோல்வியடைந்தால் (Transaction Decline), அதற்காக ரூ.25 அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
SBI வாடிக்கையாளர்களே மறக்காதீங்க! ஜன.15-க்குள் இதை செய்யலைனா உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும்..!
ATM and UPI

இந்த மாற்றங்கள் அனைத்தும் வரும் ஏப்ரல் 1-ம்தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்த வங்கிகள் அறிவித்துள்ளதால், தேவையற்ற கட்டணங்களைத் தவிர்க்க வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியின் புதிய விதிமுறைகளை அறிந்து செயல்படுவது புத்திசாலித்தனம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com