

பீகாரில் கடந்தாண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக அடங்கிய தேஜ கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
இந்த தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதிலும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றார். இதன் மூலம் கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக பீகார் அரசியலில் அசைக்க முடியாத அளவுக்கு நிதிஷ் குமார் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 75 வயதான நிதிஷ் குமார் 10 முறை முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இந்தியாவின் நீண்ட கால முதலமைச்சர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரராக உள்ளார்.
இதற்கிடையே சமீபத்தில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் பீகாரில் இருந்து நிதிஷ்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்று கடந்த 10-ம்தேதியன்று ராஜ்யசபா எம்பியாக பதவியேற்றுக்கொண்டார்.
மாநிலங்களவை உறுப்பினராக நிதிஷ்குமார் பதவியேற்ற நிலையில் நேற்று ஆளுநரிடம் தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தை அளித்தார்.
இதனையடுத்து நேற்று பாட்னாவில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்களின் கூட்டத்தில் துணை முதல் மந்திரியாக இருந்த சாம்ராட் சவுத்ரி பீகாரின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் பீகார் வரலாற்றில் முதல்முறையாக பாஜக சார்பில் ஒருவர் முதல் மந்திரி பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து தற்போது புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்ராட் சவுத்ரி இன்று முறைப்படி பதவியேற்க உள்ளார்.
சாம்ராட் சவுத்ரி பீகாரின் முதல்வராக பதவியேற்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் 2022 ஆண்டு, நிதிஷ் குமார் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறி, லாலு பிரசாத் யாதவுடன் இணைந்து 'மகாகத்பந்தன்' ஆட்சியை அமைத்தார். அந்த சமயத்தில் ‘நிதிஷ் குமாரை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை எனது தலைப்பாகையைக் கழற்ற மாட்டேன் எனச் சபதம் எடுத்து, பீகார் அரசியலில் பரபரப்பைக் கிளப்பியவர் தான் இந்த சாம்ராட் சவுத்ரி.
அதன்பிறகு சரியாக ஓராண்டு கழித்து அந்த தலைப்பாகையை அவிழ்த்து அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் சமர்பித்தார். அதற்கு காரணம் நிதிஷ் குமார் பாஜகவுடன் கூட்டணி வைக்க சம்மதித்ததால் தனது சபதத்தை நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1968-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி முங்கர் மாவட்டம், லக்கன்பூரில் சாம்ராட் சவுத்ரி பிறந்தார்.
சாம்ராட் சவுத்ரி மட்டுமல்ல அவரது குடும்பமே அரசியலில் ஈடுபாடு உள்ளதுடன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளனர். அதாவது சாம்ராட் சவுத்ரியின் தந்தை சகுனி தாராபூர் தொகுதியில் இருந்து ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தாயார் பார்வதி சம்தா கட்சி சார்பில் 1998ம் ஆண்டு இதே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தாராபூர் தொகுதியில் தந்தை, தாய், மகன் ஆகிய 3 பேரும் மொத்தம் 12 முறை போட்டியிட்டு 9 முறை வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1990ம் ஆண்டு அரசியலில் நுழைந்த சாம்ராட் சவுத்ரி, 1999ல் பீகார் அரசில் வேளாண் துறை அமைச்சராக பதவியேற்றார். 2000 மற்றும் 2010ம் ஆண்டுகளில் பர்பட்டா தொகுதியில் வெற்றி பெற்ற அவர் அமைச்சராக பதவி வகித்தார்.
பீகாரில் 2018ல் பாஜக கட்சியில் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2014ம் ஆண்டு நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சராகப் பதவியேற்று பொறுப்பேற்றார்.
பின்னர் 2021ம் ஆண்டு நிதிஷ்குமார் அமைச்சரவையில் பாஜக சார்பில் இடம்பெற்று உள்துறை துறை அமைச்சராக பதவி வகித்தார்.
2023ம் ஆண்டு முதல் 2024 வரை பாஜகவின் பீகார் மாநிலத் தலைவராகவும், அம்மாநிலத்தின் விளையாட்டு, நிதி, உள்துறை அமைச்சர், மற்றும் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சராகவும் சாம்ராட் சவுத்ரி பதவி வகித்துள்ளார்.
2025ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தாராபூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக பீகார் அரசியலில் அசைக்க முடியாத அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி வந்த 75 வயதான நிதிஷ் குமாரை வீழ்த்தி புதிய முதல்வராக பதிவியேற்க உள்ள 58 வயதான சாம்ராட் சவுத்ரியை அரசியலில் களத்தில் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.