
40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறவோ அல்லது புதுப்பிக்கவோ இனிமேல் மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஓட்டுநர் உரிமம் என்பது ஒரு நபர் சாலைகளில் மோட்டார் வாகனங்களை ஓட்டுவதற்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஆவணமாகும். இது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் மண்டல போக்குவரத்து அலுவலகத்தால் (RTO) வழங்கப்படுகிறது. அதாவது, ஓட்டுநர் உரிமம் என்பது ஒரு குறிப்பிட்ட நபர், மோட்டார் சைக்கிள், கார், லாரி அல்லது பேருந்து போன்ற மோட்டார் வாகனங்களை பொது சாலைகளில் ஓட்டுவதற்கு சட்டப்பூர்வமாக தகுதி பெற்றவர் என்பதை குறிக்கும் ஆவணமாகும்.
ஓட்டுநர் உரிமம் இந்திய சாலைகளில் தனிநபர்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு அங்கீகாரம் அளிக்கும் அடையாளச் சான்றாக செயல்படுகிறது. இந்திய சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாகும்.
பாஸ்போர்ட், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை போன்ற மற்ற அடையாள அட்டைகளை போலவே ஓட்டுநர் உரிமமும் மதிப்புடையதாகும். விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களிலும், பல்வேறு அதிகாரப்பூர்வ வேலைகளின் போதும் உங்கள் ஓட்டுநர் உரிமத்தை தனிப்பட்ட அடையாள சான்றாக பயன்படுத்தலாம். அதேபோல் ஓட்டுநர் உரிமம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். எனவே, அதை புதுப்பிக்க வேண்டியது அவசியம்.
ஓட்டுநர் உரிமம் பெற தேவையான ஆவணங்கள் :
ஆர்டிஓ (RTO) அலுவலகத்தில் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
வயதுச் சான்றுக்காக பிறப்புச் சான்றிதழ், பான் கார்டு, 10-வது மதிப்பெண் பட்டியல், பள்ளியில் இருந்து பெறப்பட்ட TC அல்லது மாற்றுச் சான்றிதழ் போன்ற ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்.
முகவரிச் சான்றுக்காக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
இதனுடன் முறையாக நிரப்பப்பட்ட ஓட்டுநர் உரிமத்திற்கான விண்ணப்பப் படிவம், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் (7), விண்ணப்ப கட்டணம் போன்ற பிற அத்தியாவசிய ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும்.
இந்நிலையில் 40 வயதை கடந்த ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் அல்லது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சான்றளிக்கப்பட்ட மருத்துவரிடம் இருந்து வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழைப் பெற வேண்டும் என்றும் அப்படி மருத்துவ சான்றிதழ் இல்லாத படிவங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறவோ அல்லது புதுப்பிக்கவோ இனிமேல் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்ற பின்னரே ஓட்டுநர் உரிமம் பெற இயலும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மத்திய மோட்டார் வாகன விதி எண் 5ன் படி 40 வயதை கடந்தவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் பெறவோ அல்லது ஓட்டுநர் உரிமத்தினைப் புதுப்பிக்கவோ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.