

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுமுறை, வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது, உட்கார்ந்திருக்கும் போது, நடனமாடிக்கொண்டிருக்கும் போது, வாக்கிங் போகும் போது, விளையாடும் போது என திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடையும் சம்பவங்கள் அடிக்கடி செய்திகளில் வந்த வண்ணம் உள்ளது. இளம் வயதினருக்கும், எந்த வித கெட்ட பழக்க வழக்கமும் இல்லாதவர்களுக்கும் தற்போது மாரடைப்பு ஏற்படுவது தொடர்கதையாகவே மாறிவிட்டது.
இந்த மாதிரியான காலகாட்டத்தில் இருதய அடைப்புகளை கண்டுபிடிப்பதற்கு coronary angiogram, cardiac CT scan, ECG, Echo போன்ற பரிசோதனைகள் இருந்தாலும் இதற்கு அடுத்து என்ன பரிசோதனை செய்யலாம் என்று பார்க்கும் போது CT Calcium Scoring என்ற புதிய பரிசோதனை முறை சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உடல்பருமன், குடும்ப பாரம்பரியம் காரணமாக இருதய அடைப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றிற்காக மருந்து எடுத்துக்கொண்டிருப்பவர்களும், புகைப்பழக்கம், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனை உள்ளவர்களும் தங்களது இதயத்தில் ஏதாவது பிரச்சனை இருக்கா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள CT Calcium Scoring என்ற புதிய பரிசோதனை மிகவும் உபயோகமாக இருக்கும்.
இந்த பரிசோதனை மூலம் இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு இருக்கிறதா என்று கண்டறிந்து எங்கு அடைப்பு இருக்கிறது, எந்த அளவிற்கு கொழுப்பு படிந்துள்ளது என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். இந்த பரிசோதனை மேற்கொள்ள அதிநவீன சிடி ஸ்கேன் பரிசோதனை கருவி உள்ளது. இதன் மூலம் ஊசிகளோ, மருந்துகளோ இல்லாமல் எளிய முறையில் 2 நிமிடத்தில் பரிசோதனை முடிவுகள் கிடைக்கின்றன.
ஒருவருக்கு இந்த பரிசோதனை செய்வதன் மூலம் அவருக்கு ஏற்கனவே உடல் பிரச்சனைகள் இருந்தால் அதற்கு தற்போது எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளே போதுமானதா அல்லது வேறு மாத்திரை எடுத்து கொள்ள வேண்டுமா அல்லது அடுத்தக்கட்டமாக ஆஞ்சியோ போன்ற ஏதாவது ஒரு பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமா என்பதை பற்றி ஒரு இறுதி முடிவுக்கு வரமுடியும். அதுமட்டுமின்றி இந்த பரிசோதனையின் மூலமாக ஒருவருக்கு மாரடைப்பு வருவதை நிச்சயமாக தடுக்க முடியும்.
தற்போதுள்ள காலகட்டத்தில் 35 வயதிலேயே யாருக்கு வேண்டுமானாலும் மாரடைப்பு வரும் நிலை உள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட வயதினர் தான் இந்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என்று இல்லை. 30 வயதை தாண்டிய எவரும் இந்த பரிசோதனையை செய்து கொள்ளலாம்.
மாரடைப்பு வராமல் தடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள், உடலில் ஏதேனும் இணைநோய் உள்ளவர்கள், பரம்பரையில் இருதய நோய் உள்ளவர்கள், புகைப்பழக்கம், உடல் பருமன் உள்ளவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த பரிசோதனையை செய்து கொள்ளலாம்.
உங்கள் இருதயம் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வதற்கு ஒரு 2 நிமிடம் செலவழித்தால் மட்டுமே போதுமானது.
ஒரு நபர் இந்த பரிசோதனையை தானாக வந்து எடுத்துக்கொள்வதை விட மருத்துவரின் பரிந்துரையின் பேரில் இந்த பரிசோதனையை எடுத்துக்கொள்வது சிறப்பாக இருக்கும்.
தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த பரிசோதனையை செய்ய வெறும் 500 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது முழுஉடல் பரிசோதனைக்கு வரும் மக்கள் அந்த தொகுப்பிலேயே CT Calcium Scoring பரிசோதனையையும் செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் இதற்காக தனியாக கட்டணம் ஏதும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
அதுவே தனியார் மருத்துவமனைகளில் இதுபோன்ற பரிசோதனைக்கு 4000 முதல் 5000 ரூபாய் வரை வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி வெறும் இரண்டே நிமிடத்தில் இருதயத்தில் உள்ள அடைப்புகளை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடியும்.
வெறும் இரண்டே நிமிடத்தில் உங்கள் இருதயத்தில் உள்ள அடைப்புகளை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடிவதுடன் மாரடைப்பு வராமலும் தடுக்க முடியும்.