சென்னை மெட்ரோ ரயிலில் புதிய விதமான மேப் டிஸ்ப்ளே சிஸ்டம் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் அடுத்த நிலையம் மட்டுமல்லாமல் எவ்வளவு தூரம், அந்த இடைவெளியில் உள்ள இட அடையாளங்கள் போன்றவற்றையும் தெரிந்துக்கொள்வதற்கான புதிய அம்சங்கள் கொண்டுவரப்படவுள்ளன.
54 கிமீ தொலைவில் இயங்கும் மெட்ரோ ரயில்களில் பல தகவல்களைக் கொண்ட எல்சிடி அடிப்படையிலான டைனமிக் ரூட் மேப் டிஸ்பிளே சிஸ்டம், இந்த ஆண்டு இறுதிக்குள் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டேட் அதிகாரிகளின் கூற்றுப்படி, "பயணிகளின் பயணம் எளிதாகும்படி முடிந்த அளவுத் தகவல்களை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும் இதற்கான டெண்டர் விடப்பட்டு, இன்னும் சில மாதங்களில் ஒப்பந்தம் வழங்கப்படும்." என்று தெரிவித்தனர். இந்தத் திட்டத்தின் மூலம் தற்போதைய இடம், அடுத்த நிலையம், நிலையங்களுக்கான தூரம் மற்றும் அருகிலுள்ள அடையாளங்கள் போன்றவை அந்த சிஸ்டத்தில் காண்பிக்கப்படும்.
மெட்ரோ ரயிலில் ஒவ்வொரு கோச்சிலும் நான்கு டைனமிக் வரைப்படங்கள் மற்றும் நான்கு நிலையான வரைப்படங்கள் உள்ளன. நிலையான வரைப்படங்கள் எப்போதும் தொடர்ந்து நிலையாக இருக்கும். ஆனால் டைனமிக் வரைப்படங்கள் பேக்லைட் LCD அடிப்படையிலான ரூட் மேப் சிஸ்டம் மூலம் மாற்றப்படும். இடம் மற்றும் அடையாளம் போக எந்தப் பக்கம் கதவு திறக்கும் என்பதும் காட்டப்படும் என்று ஒரு மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.
மேலும் இதனைப்பற்றி நிர்வாகம் கூறியுள்ளதாவது, "மெட்ரோ ரயிலில் உள்ள வெப்பநிலை மற்றும் ரயில் இயங்கும் வேகம் போன்ற வசதிகள் கொண்டுவரப்படும். அதேபோல் அவசரநிலை என்றால், காட்சி அமைப்பு அவசர எண்கள் மற்றும் வெளியேறுவதற்கான வழிமுறைகளும் பொறுத்தப்படும். மேலும் விளம்பரம் இருக்கும் இடத்தில் என்ன செய்யலாம் என்று இன்னும் முடிவெடுக்கவில்லை. அதேபோல் இதுவரை 54கிமீ தொலைவில் மொத்தம் 52 மெட்ரோ ரயில்கள் உள்ளன. அதில் 45 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த புதிய திட்டத்திற்கான முன்மாதிரி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகிவிடும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில், படிப்படியாகவும் தொகுதிகளாகவும் டிஜிட்டல் வரைப்படங்கள் வசதித் தொடங்கப்படும்."