

SIR என்றால் என்ன?
நாடு முழுக்க தற்போது சரியான வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே வாக்காளர் சீர்திருத்தம் நடைபெற்று 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த காலக்கட்டத்தில் இடப்பெயர்ச்சி, மரணம் ஆகியவற்றை கணக்கெடுத்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவும்,18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கவும், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணி (SIR) இந்திய தேர்தல் ஆணையத்தால் (ECI) செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் கட்டமாக பீகாரில் தொடங்கிய இது தற்போது, மே.வங்கம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த பணி, கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கியது. வீடு வீடாகச் சென்று படிவங்களை கொடுத்து வாக்காளர்கள் விவரங்களை பூர்த்தி செய்யும் பணியை பூத் லெவல் அலுவலர்கள் (BLO) மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆன்லைன் விண்ணப்பம் மூலம் பூர்த்தி செய்யப்படலாம்.
எதிர்காலத்தில் வெளிப்படையான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடக்க, வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியது அவசிமாகிறது. அதேநேரம் வாக்காளர் பட்டியலில் இருப்பவரின் குடும்பத்தினரையும் ஆராய்கிறது இந்த படிவம். இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுபவர் இந்த நாட்டு குடிமகன் தானா என்பதையும் உறுதி செய்கிறார்கள்.
SIR படிவத்தை எங்கே பெறுவது?
நீங்கள் புதிய வாக்காளராக இருந்தால் இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) அதிகாரப் பூர்வமான வாக்காளர் சேவைகள் போர்ட்டலுக்குச் செல்லுங்கள். நீங்கள் இங்கே ஆன்லைனில் நேரடியாகப் பதிவு செய்யலாம் அல்லது திருத்தம் செய்யமுடியும். இது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாக இருக்கும். புதிய வாக்காளர்கள் https://voters.eci.gov.in/homepage என்ற பக்கத்திற்கு சென்று விண்ணப்பம் பற்றியும் மற்ற தகவல்களையும் அறிந்து பூர்த்தி செய்து கொள்ளலாம். அல்லது உங்கள் வீட்டிற்கு படிவம் வரும்போது பூர்த்தி செய்தும் தரலாம்.
படிவம் பூர்த்தி செய்யும் முறை:
வீடு தேடிவந்து, ஒவ்வொரு வீட்டிற்கும் வாக்காளர் கணக்கீட்டு படிவத்தினை உள்ளூர் BLO பணியாளர்கள் தருகின்றனர். ஏற்கனவே உள்ள வாக்காளர்களின் புகைப்படமும் முகவரியும் அந்த படிவத்தில் இருக்கின்றன. உங்களின் புதிய புகைப்படத்தை அருகில் ஒட்ட கட்டம் ஒதுக்கப்பட்டு உள்ளது. படிவத்தில் வாக்காளர் அடையாள அட்டை எண் , வரிசை எண், பாகம் எண், உங்களின் தேர்தல் பூத் முகவரி வரை இடம்பெற்றுள்ளது. உங்களின் சட்டமன்ற / பாராளுமன்ற தொகுதி விபரமும் அதில் இருக்கிறது.
வாக்காளர் படிவத்தில் உங்கள் அடையாள அட்டையில் உள்ளபடி விவரங்களை பதிவு செய்யுங்கள். படிவத்தில் பிறந்த தேதி, ஆதார் எண், கைபேசி எண், தந்தை/ பாதுகாவலர் பெயர் மற்றும் அவரின் வாக்காளர் அடையாள அட்டை எண், தாயார் பெயர் மற்றும் அவரது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண், திருமணம் ஆகி இருந்தால் கணவர்/ மனைவியின் பெயர் மற்றும் அவரது வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றை பூர்த்தி செய்யவும்.
அதற்கு பிறகு முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளரின் விவரங்கள் என்ற பகுதியையும் பூர்த்தி செய்யவும். இதில் உங்களின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் (இருந்தால்), உறவினர் பெயர், உறவுமுறை, மாவட்டம், மாநிலம், சட்டமன்ற தொகுதியின் பெயர், அதன் எண், வரிசை எண் ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும். இந்த படிவத்தின் அடிப்பகுதியில் உங்களது கையெழுத்தை குறிப்பிட்ட பகுதியில் இடவேண்டும். அல்லது உங்கள் குடும்பத்தினர் ஏதேனும் ஒருவர் அங்கு கையெழுத்திடலாம்.
பின்னர் இந்த படிவத்தை உள்ளூர் BLO அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். உங்கள் வயதிற்கான சான்றாக அடையாள அட்டை நகலை வழங்கவும். மேலும் விபரங்களுக்கு விண்ணப்பத்தின் பின்பக்கம் பார்க்கவும். சந்தேகம் இருந்தால் BLO அதிகாரியின் தொடர்பு எண் படிவத்தின் மேலே இருக்கும் அவரை தொடர்பு கொள்ளவும்.