டெல்லி தலைநகர் பகுதியில் உள்ள தெரு நாய்களைக் காப்பகங்களுக்கு மாற்ற வேண்டும் என ஆகஸ்ட் 11 அன்று இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என். வி. அஞ்சாரியா அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
ஆகஸ்ட் 11 அன்று, டெல்லியில் எட்டு வாரங்களுக்குள் நாய்கள் காப்பகங்களை உடனடியாக உருவாக்கி, தெரு நாய்களை அங்கு மாற்றுமாறு உத்தரவிட்டது. மறுநாள், இந்த உத்தரவுகள் முந்தைய அமர்வுகளின் உத்தரவுகளுக்கு முரணாக இருப்பதாக சில வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி முன் குறிப்பிட்டதையடுத்து, இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.
ஆகஸ்ட் 14 அன்று, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தது. பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவு அளிக்கக் கூடாது என்றும், அதற்குப் பதிலாக, குறிப்பிட்ட பிரத்யேகப் பகுதிகளில் மட்டுமே உணவு அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மாநகராட்சி வார்டுகளில் நாய்களுக்கு உணவு அளிப்பதற்கான பகுதிகளை உருவாக்குமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய உச்ச நீதிமன்ற உத்தரவின் முக்கிய அம்சங்கள்:
மாநகராட்சிகள் ஒவ்வொரு வார்டிலும் நாய்களுக்கு உணவு அளிப்பதற்கான பிரத்யேக இடங்களை உருவாக்க வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும் பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவு அளிக்கக் கூடாது. இந்த உத்தரவை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இந்த உத்தரவு டெல்லி-என்சிஆர் பகுதிக்கு மட்டும் அல்லாமல், இந்தியா முழுவதும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 8 அன்று பிறப்பிக்கப்பட்ட முந்தைய உத்தரவுக்கு மாறாக, தற்போது, தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்கம் செய்யப்பட்ட நாய்களை அதே பகுதியில் மீண்டும் விடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
வெறிநாய் காய்ச்சல் அல்லது ஆக்ரோஷமான குணம் கொண்ட நாய்களுக்கு தடுப்பூசி போட்டு, தனிப் புகலிடங்களில் வைத்துப் பராமரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
விதிமீறல்களைப் புகாரளிக்க உள்ளாட்சி அமைப்புகள் ஒரு உதவி எண்ணை உருவாக்க வேண்டும். தெரு நாய்களைத் தத்தெடுக்க விரும்பும் விலங்கு ஆர்வலர்கள், அதற்கான விண்ணப்பத்தை உள்ளாட்சி அமைப்புகளிடம் சமர்ப்பிக்கலாம். மேலும், அரசுப் பணியாளர்களைத் தடுக்கும் விலங்கு ஆர்வலர்கள் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓ) ₹25,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.